×

தெலங்கானாவுக்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து ஐஜி மீதான பாலியல் வழக்கை தமிழகத்தில் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பெண் எஸ்பியை அந்த துறையின் உயர் அதிகாரியான ஐஜி முருகன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பான பாலியல் வழக்கை தெலங்கானா போலீசார் விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ஐஜி முருகன் மற்றும் அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இருப்பினும் அண்டை மாநில விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் தனக்கு நியாயம் கிடைக்கும். அதனால் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டாம் என பாதிகப்பட்ட பெண் எஸ்பி தரப்பில் கடந்த 23ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய இடைக்கால பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி மற்றும் எச்.ராய் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரிஸ்டாட்டில், “இந்த விவகாரத்தில் பாலியல் புகார் தந்த பெண் எஸ்பி தரப்பில் வழக்கை தமிழகத்தில் விசாரிக்க ஆட்சேபனை இல்லை. அதனால் தெலங்கானா மாநிலத்துக்கு வழக்கை மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் வழக்கு விசாரணையை தமிழக அதிகாரிகளே தொடரவும் நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது ஐஜி.முருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதத்தில், “ஆட்சி மாறியுள்ளதால் தனது வழக்கில் தமிழத்திலேயே நியாயம் கிடைக்கும் என புகார் கொடுத்த பெண் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். அப்படி என்றால் அவர் நீதிமன்றத்தை விட அரசை அதிகம் நம்புகிறாரா என்பது தெரியவில்லை. இருப்பினும் அவரது கோரிக்கையை நாங்கள் எதிர்க்கவில்லை. வழக்கை தமிழகத்திலேயே தொடர்ந்து விசாரிக்கலாம் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், “பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததில் ஐஜி முருகனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தெலுங்கானா மாநில விசாரணைக்கு மாற்றியமைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உட்பட அனைவரின் கோரிக்கையும் ஒருமித்து இருப்பதால் அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அதனால் இந்த வழக்கை தமிழக அதிகாரிகளே தொடர்ந்து விசாரணை நடத்தலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது எனக்கூறி அதுதொடர்பான வழக்கை நேற்று முடித்து வைத்தனர்.

Tags : High Court ,Telangana ,Sex ,IG ,Tamil Nadu ,Supreme Court , Supreme Court orders quashing of IG's sex case in Tamil Nadu: Supreme Court orders action
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...