×

ஜோலார்பேட்டை அருகே விவசாய நிலத்தில் இறங்கி நாற்று நட்ட கலெக்டர்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹா விவசாய நிலத்தில் இறங்கி நெல் நாற்று நட்டு விவசாயிகளை உற்சாகப்படுத்தினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்றிய நகர ஊராட்சிகளில் உள்ள 500 வாக்குச்சாவடி மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று முன்தினம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முகாமை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

இதற்காக நேற்று முன்தினம் காலை காரில் பயணம் செய்த கலெக்டர், ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் கிராம விவசாய நிலத்தில் விவசாயத் தொழிலாளர்கள் நெல் நாற்று நடவு பணியில் ஈடுபட்டிருப்பதை கண்டார். உடனடியாக காரை நிறுத்திய கலெக்டர், சேற்றில் இறங்கி விவசாய தொழிலாளர்களுடன் இணைந்து நெல் நாற்றுகளை நட்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார். அப்போது அவரது மனைவி ஷிவாலிகாவும் நெல் நாற்றுகளை நட்டார். இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். வருங்கால சந்ததிகளுக்கு விவசாயம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில், கலெக்டர் சேற்றில் இறங்கி நெல் நாற்றுகளை நடவு செய்ததற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags : Jolarpet , Jolarpettai, Collector
× RELATED ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில்...