கர்நாடக மாநில அரசு உடனடியாக தமிழகத்துக்கு நிலுவை தண்ணீரை வழங்க வேண்டும்: காவிரி ஆணைய கூட்டத்தில் உத்தரவு

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 14வது கூட்டம் டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலத்தில் ஒன்றிய நீர்வள ஆணைய தலைவரும் , காவிரி ஆணையத்தின் இடைக்கால தலைவருமான எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் தமிழகத்தின் தரப்பில் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோன்று கர்நாடகா அரசு தரப்பில் கூடுதல் செயலாளர் ராகேஷ் சிங் கலந்து கொண்டார். மேலும், புதுவை, கேரளா ஆகிய மாநில பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.  கூட்டம் தொடங்கிய உடனே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என கர்நாடகா அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி கர்நாடகா நீர் பங்கீட்டை முறையாக தமிழகத்திற்கு கொடுக்கவில்லை. இந்த மாதம்(செப்டம்பர்) 23ம் தேதி வரையில் 37.3 டி.எம்.சி தண்ணீர் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து கடந்த முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் கர்நாடகா அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை.  

கர்நாடகத்தில் தற்போது மழை நீடித்து வரும் நிலையிலும் அந்த மாநில அரசு தண்னீரை திறந்து விடவில்லை. அதனால் நிலுவை தண்ணீர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கான நீர் பங்கீடு ஆகியவற்றை உடனடியாக காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.  கூட்டத்திற்கு பிறகு காவிரி ஆணைய தலைவர் அளித்த பேட்டியில், ‘ஆணைய கூட்டத்தில் நீர் பங்கீடு குறித்து நான்கு மாநிலங்களிடமும் விவாதிக்கப்பட்டது. இதில் குறிப்பாக தமிழகத்திற்கு தரவேண்டிய செப்டம்பர் 23ம் தேதி வரையிலான நிலுவை தண்ணீர் 37.3 டிஎம்சி மற்றும் அக்டோபர் மாதத்துக்கான தண்ணீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் மேகதாது குறித்து விவாதிக்க கர்நாடகா வலியுறுத்தியது. ஆனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் ஒருமித்த கருத்துக்களை தெரிவித்தால் மட்டுமே அதுகுறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதால் அது கைவிடப்பட்டது. அதேபோன்று மேகதாது அணை கட்ட தமிழகம் உள்ளிட்ட கீழ் பாசன மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் கர்நாடக அரசு அணை அமைக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த கூட்டம் அக்டோபர் 7ம் தேதி நடைபெற உள்ளது’. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>