246 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக இந்திய அமெரிக்க அதிகாரிக்கு டர்பன் அணிய அனுமதி: அமெரிக்க கடற்படை அதிரடி

நியூயார்க்: அமெரிக்க கடற்படையில் 246 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய அமெரிக்க வாலிபர் அவரது மத கொள்கைப்படி டர்பன் அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அமெரிக்க கடற்படை பிரிவில் அதிகாரியாக இருப்பவர் 26 வயது சுக்பிர் தூர். இவரது பெற்றோர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றவர்கள். சுக்பிர் தூர் வாஷிங்டனில் படித்து வளர்ந்தவர். பின்னர், அமெரிக்க கடற்படையில் சேர்ந்து தற்போது அதிகாரியாக உள்ளார்.

இந்திய வம்சாவளி சீக்கிய மதத்தை சேர்ந்த இவரை தங்கள் மத கொள்கையின் படி டர்பன் அணிய அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தடை விதித்திருந்தனர். தூரின் தொடர் முயற்சியால், 246 ஆண்டுகால அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதன் முறையாக அவருக்கு டர்பன் அணிய அனுமதி வழங்கியுள்ளனர். இதன்படி அவர் சீருடை அணியாத சாதாரண பணி நேரங்களில் டர்பன் அணியலாம். ஆனால் பொது பேரணி, பதற்றமான பகுதிகளில் பணியில் ஈடுபடும் போது டர்பன் அணியக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது குறித்து சுக்பிர் தூர் கூறுகையில், எனது மத அடிப்படையில் எனக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். இதற்காக தொடர்ந்து வழக்கை சந்திப்பேன் என்றார். கடற்படையின் செய்திதொடர்பாளர் கர்னல் பிரஷோர் கூறுகையில், அமெரிக்க கடற்படையில் சமச்சீரான கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள் உள்ளன. இது தான் போர்களத்தில் நமது வெற்றியை நிலைநாட்டும். இந்த மண்ணின் சட்டதிட்டங்களை மாற்ற முடியாது என்றார்.

Related Stories:

More
>