மறைமலைநகரில் குடோனில் பதுக்கி வைத்த பல பார்சல்களில் 1 கோடி குட்கா பொருட்கள் சிக்கின: 6 பேர் கைது: 4 கார், 4 பைக், செல்போன்கள் பறிமுதல்

செங்கல்பட்டு: மறைமலைநகர் அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து, கடைகளுக்கு சில்லறை விலையில் விற்பனை செய்வதாக, மறைமலைநகர் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்பி விஜயகுமார், வண்டலூர் டிஎஸ்பி அனுமந்தன், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காட்டூர் பகுதியில் உள்ள ஒதுக்குபுறமான இடத்தில் இருந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, போலீசாரை கண்டதும், அங்கிருந்த 6 பேர், தப்பியோடினர். உடனே போலீசார், அவர்களை விரட்டி ெசன்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த ஆனந்த் (35), மகேஷ் (25), ராஜஸ்தானை சேர்ந்த தாமோதரன் (22), நரேஷ்குமார் (20), காஞ்சிபுர மணிகண்டன் (30), மாரிமுத்து (21) என தெரிந்தது. தொடர்ந்து குடோனில் நடத்திய சோதனையில், பெட்டி பெட்டியாக பார்சல்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது, குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு 1 கோடி என கூறப்படுகிறது. அங்கிருந்து 30 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து குட்கா பொருட்கள் சப்ளை செய்வதற்காக பயன்படுத்திய 4 கார்கள், 4 பைக், 6 செல்போன், 50 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, 2 வேன்களில், குட்கா பொருட்களை ஏற்றி, பிடிபட்ட 6 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், கடந்த  6 மாதங்களாக குடோனை வாடகைக்கு எடுத்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்பட பல மாவட்டங்களில் குட்கா பொருட்களை சில்லறையாக விற்பனை செய்துள்ளனர். இதற்காக, காஸ் ஸ்டவ் ரிப்பேர் சரி செய்வது, பிஸ்கெட் விற்பது போல், பார்சல்களை வைத்து, குட்கா பொருட்களை விற்பனை செய்துள்ளனர் என தெரியவந்தது.  தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆந்திராவில் இருந்து குட்கா சப்ளை செய்பவரை, தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: