மகன் கொலைக்கு பழி தீர்க்க மயிலாப்பூரில் நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த 4 ரவுடிகள் சுற்றிவளைப்பு: ரகசிய தகவலின்படி போலீஸ் நடவடிக்கை

சென்னை: மகன் கொலைக்கு பழி தீர்க்க மயிலாப்பூரில் நாட்டு வெடிகுண்டுடன் பதுங்கியிருந்த 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு மற்றும் 5 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மயிலாப்பூர் நொச்சி நகரில் சிலர் நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் கொலை திட்டம் தீட்டி வருவதாகவும் மயிலாப்பூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நொச்சி நகரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, முருகேசன் (45) என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்த முயன்றபோது, அங்கிருந்த 4 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பிறகு அந்த வீட்டில் சோதனை செய்தபோது 2 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாகத்திகள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் அருகே கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முருகேசனின் மகன் ரவுடி சரவணன் (25) என்பவரை 4 பேர் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன், ஷாம், அஜித், விஜய் ஆகிய 4 பேரை மயிலாப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள 4 ரவுடிகளும் ஓரிரு நாளில் ஜாமீனில் வெளியே வர உள்ளதாக சரவணனின் தந்தை முருகேசனுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே முருகேசன், தனது மகன் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக சிறையில் இருந்து ெவளியே வந்தவுடன் 4 பேரையும் கொலை செய்ய, முருகன் (26), கார்த்திக் (33), பிரவீன்குமார் (32) உள்ளிட்ட 3 பேரை தனது வீட்டில் தங்க வைத்து, சதித்திட்டம் தீட்டியதும் தெரிந்தது.

மேலும், கண்ணகி நகரை சேர்ந்த ரவுடி சுனாமி சுரேஷிடம் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் செம்மஞ்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பட்டாக்கத்திகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் முருகேசன் உட்பட 4 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொலை செய்வதற்கு முன்பு குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாரை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

Related Stories: