ஓராண்டு தடைக்கு பிறகு இன்று ஒகேனக்கல் சுற்றுலா தலம் திறப்பு: பரிசல் சவாரி செய்து பயணிகள் உற்சாகம்

தர்மபுரி: தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, ஓராண்டு தடைக்கு பிறகு ஒகேனக்கல் சுற்றுலா தலம் இன்று காலை திறக்கப்பட்டதையடுத்து, சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து பரிசல் சவாரி செய்து காவிரியின் அழகை கண்டு ரசித்து உற்சாகமடைந்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இங்கு, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஓராண்டாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தலம் வெறிச்சோடியது. அங்குள்ள சிறு வியாபாரிகள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், மீனவர்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், ஒகேனக்கல் சுற்றுலாதலம் ஓராண்டிற்கு பிறகு அரசு வழிகாட்டுதல்படி இன்று காலை 7 மணிக்கு திறக்கப்பட்டது.

இங்கு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்தனர். இவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனரா என்பது குறித்து, மடம் செக்போஸ்ட், ஒகேனக்கல் பேருந்துநிலையம், ஆலம்பாடி செக்போஸ்ட் ஆகிய இடங்களில் சோதனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்று அல்லது ஆன்லைன் ஆதாரத்தை காண்பித்த பிறகே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள், அருவி, ஆற்றங்கரையோரங்களில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பரிசல்களில் சவாரி சென்று காவிரியின் அழகை கண்டு ரசித்து உற்சாகம் அடைந்தனர். இதனால் பரிசல் ஓட்டிகள், சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: