நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை; வேகமாக சரிந்து வரும் வைகை அணை நீர்மட்டம்: விவசாயிகள் கவலை

ஆண்டிபட்டி: நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. கடந்த மாதம் தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த ஜூன் மாதத்தில் 68 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட முதல்போகம் மற்றும் ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பெய்யவில்லை. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து அடியோடு சரிந்தது. முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு நீர்வரத்தாக உள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து குறைவாக இருப்பதால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

கடந்த மாதம் 65 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம் தற்போது 54.30 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை இல்லாத காரணத்தால் வைகை அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. வைகை அணை நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளதால், வைகை அணையை நம்பியுள்ள மக்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories:

More
>