ஜோலார்பேட்டையில் ரெய்டு; ரயிலில் கடத்திய 42 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டையில் போலீசார் நடத்திய சோதனையில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 42 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை ேபாலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்றிரவு ரயில்வே இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் காமராஜ் நகரில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 12 மணி அளவில் 5வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.  அந்த ரயிலில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு பெட்டியில் உள்ள இருக்கையின் அடியில் மூட்டை ஒன்று இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் மூட்டை வைத்திருந்த நபரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக தகவல் அளித்ததால் போலீசார், மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பிடிபட்ட நபர் ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த ரஜினிகுமார்(43) என்பதும், கர்நாடகாவில் இருந்து குட்கா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

அவரிடம் இருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 42கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் குட்காவை திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் இன்று ஒப்படைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ரஜினிகுமாரை கைது செய்தனர். மேலும் குட்கா கடத்தலில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>