×

வெளிநாட்டினர் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் : நீதிபதிகள் வேதனை!!

சென்னை : இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்காணிக்க தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழில், வேலைவாய்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா வரும் இலங்கை, நைஜிரியா, சீனா, ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பலர் விசா காலம் முடிவடைந்தும் இந்தியாவிலேயே தங்கி இருந்த சிலர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளன இது போன்ற வழக்கில் தொடர்புடைய சுரேஷ் ராஜ் உள்ளிட்ட பல வெளிநாட்டினர் ஜாமீன் கோரியும் முன் ஜாமீன் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவின் அடிப்படையில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் 13, 281 பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக டிஜிபி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி தண்டபாணி, வெளிநாட்டினர் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். விசா காலம் முடிவடைந்து தங்கி இருக்கும் பலர் போலி ஆவணங்கள் மூலமாக இந்திய அடையாள அட்டைகளை பெற்றுள்ளனர்.குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கைதான வெளிநாட்டினர் ஜாமீன், முன் ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், இதை தடுக்க சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம். சிறையில் உள்ள வெளிநாட்டினரை தண்டனைக் காலம் முடிந்த பின் சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினரின் வருகையை கண்காணிக்க தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். தமிழகம் வரும் வெளிநாட்டினரை கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிடுகிறோம்,என்று கூறினார்.

Tags : India , சென்னை உயர்நீதிமன்றம்
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...