×

மாநிலங்களவை உறுப்பினராக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி தேர்வு!


போபால்: மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் யாரும் போட்டியிடாத நிலையில் பாஜகவின் எல்.முருகன் போட்டியின்றி தேர்வானார். தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த ஜூலையில் ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்றார். தற்போது, அவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்பி.யாக இல்லை. மத்தியப் பிரதேசத்தில் பாஜ எம்பி.யாக இருந்த தர்வார் சந்த் கெலாட், கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக உள்ள இந்த பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில் எல்.முருகன் போட்டிபோட்டியிட்டார்.

இந்நிலையில், போபாலில் முருகன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 230. இதில், பாஜ.வுக்கு 125 இடங்கள் உள்ளன. 95 உறுப்பினர்களை கொண்ட பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. எனவே, எல்.முருகன் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.  அதற்கான சான்றிதழ் எல்.முருகனிடம் வழங்கப்பட்டது. 15 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் நான்கு சட்டசபை உறுப்பினர்களை பாஜகவுக்கு பெற்றுக் கொடுத்ததில் முருகன் பங்களிப்பு அபாரமானது. தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட முருகன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதற்கெல்லாம் பரிசாக ஒன்றிய அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை சேர்ந்த 3வது எம்பி

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் திருநாவுக்கரசர், இல.கணேசன் ஆகியோர் ஏற்கனவே மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தற்போது அதே மாநிலத்தில் இருந்து 3வதாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Union Minister ,L. Murugan ,State , மாநிலங்களவை எம்.பி.
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...