×

விவசாயிகளின் பாரத் பந்த்: கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம்: விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதையொட்டி அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள் உள்பட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. கேரளாவில் பாரத் பந்துக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இடது முன்னணி அறிவித்து இருந்தது. அதன்படி இன்று கேரளா முழுவதும் கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோ, டாக்சிகள் லாரிகள் உள்பட வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. இதேபோல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.

மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் ரயில், விமான போக்குவரத்துக்கள் வழக்கம் போல இயங்குகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் இன்று திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


Tags : Bharat Bandh of ,Kerala , Bharat Bandh of farmers: Impact on normal life in Kerala
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு