மோசெல் ஓபன் டென்னிஸ் கோப்பையை கைப்பற்றினார் ஹர்காஸ்

மெட்ஸ்: மோசெல் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பைனலில் ஸ்பெயினின் பாப்லோ கேரனோ பஸ்டாவை வீழ்த்தி, போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பிரான்சின் மெட்ஸ் நகரில் நேற்று நடந்த மோசெல் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பைனலில் ஹியூபர்ட் ஹர்காசும், கேரனோ பஸ்டாவும் மோதினர். ஹர்காசின் முதல் கேமை, கேரனோ பஸ்டா பிரேக் செய்து, முன்னிலையுடன் போட்டியை துவக்கினார். இருப்பினும் கேரனோ பஸ்டாவின் 8வது கேமை பதிலுக்கு ஹர்காஸ் பிரேக் செய்ய, இருவரும் சமநிலையை எட்டினர். இதனால் அந்த செட் டைபிரேக்கர் வரை நீடித்தது.

டைபிரேக்கரில் துல்லியமான சர்வீஸ்கள் மூலம் அந்த செட்டை ஹர்காஸ் கைப்பற்றினார். இரண்டாவது செட்டின் துவக்கில் இருவரும் மாறி, மாறி கேம்களை பிரேக் செய்தனர். இருப்பினும் அதிரடியாக சர்வீஸ்கள் மூலம் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய ஹர்காஸ், 2வது செட்டை எளிதாக கைப்பற்றினார். இதன் மூலம் 7-6, 6-3 என நேர் செட்களில் கேர னோ பஸ்டாவை வீழ்த்தி, மோசெல் ஓபன் ஆடவர் ஒற்றையர் கோப்பையை கைப்பற்றினார்.

இரட்டையர் போட்டியிலும் வெற்றி

ஒற்றையர் பைனல் முடிந்த சில மணி நேரங்களிலேயே இரட்டையர் போட்டிக்கான பைனல் அதே கோர்ட்டில் நடந்தது. இதில் ஹர்காசும், சக நாட்டவரான ருான் ஷீலின்ஸ்கியும் போலந்தின் ஹியூகோ நைஸ் மற்றும் பிரான்சின் ஆர்தர் ரிண்டர்க்நெச் ஜோடியுடன் மோதினர். முதல் செட்டை சற்றுப் போராடி 7-5 என கைப்பற்றிய ஹர்காஸ் ஜோடி, இரண்டாவது செட்டை எளிதாக 6-3 என கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் மோசெல் ஓபன் ஆடவர் ஒற்றையர் கோப்பை மற்றும் இரட்டையர் கோப்பை என இரண்டையும் ஹர்காஸ் வென்று, சாதனை படைத்துள்ளார்.

Related Stories:

More