கணவர் கொடுமையால் தற்கொலை மிரட்டல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு இளம்பெண் தர்ணா

நெல்லை : கணவர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் குடும்பத்தோடு வந்து நேற்று தர்ணா மேற்கொண்டார். தற்கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து அவர்கள் நகர மறுத்தததால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் சுகப்பிரியா (23). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜா (25) என்பவரும் 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நாகலட்சுமி என்ற மகள் உள்ளார். சுகப்பிரியா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் மகாராஜா வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், விவாகரத்து கேட்டு அடிக்கடி அடித்துக் காயப்படுத்தியதாகவும் சுகப்பிரியா வி.கே.புரம் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து அம்பை மகளிர் காவல் நிலையத்திலும், எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் அளித்தார்.

வி.கே.புரம் போலீசார் மற்றும் மகளிர் போலீசார் அவரது புகாரை ஏற்க மறுத்ததோடு நியாயம் கிடைக்க கோர்ட்டை அணுகுமாறு கூறி அனுப்பி விட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட சுகப்பிரியா, குடும்பத்தோடு சென்று தீக்குளிக்கப் போவதாக கூறிவிட்டு நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். விடுமுறை நாளான நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

சுகப்பிரியா, அவரது தாயார் பிரேமா (48), அவரது அண்ணன் வெங்கடேஷ், குழந்தைகள் நாகலட்சுமி ஆகிய 4 பேரும் கலெக்டர் அலுவலகம் வந்து திடீர் தர்ணா மேற்கொண்டதோடு, கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ‘எங்கு சென்றாலும் நியாயம் கிடைக்கவில்லை என்றும், எனது கணவரின் தந்தை தலையாரி என்பதால் என்னுடைய புகாரை வி.கே.புரம் போலீசார் விசாரிக்க மறுக்கின்றனர்’ என்றும் போலீசாரிடம் சுகப்பிரியா தெரிவித்தார். நியாயம் கிடைக்கும் வரை இங்கிருந்து நகர மாட்டோம் என கூறிய குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் தர்ணா மேற்கொண்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அந்தப் பெண்ணை எஸ்.பி. அலுவலக அதிகாரிகளுடன் பேச வைத்து விரைவில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories:

More
>