வேலூர் மாவட்டத்தில் விளம்பரதாரர் பெயர் நீக்கி காவல் நிலையங்களில் புதிய பலகை வைப்பு-டிஜிபி உத்தரவின்பேரில் நடவடிக்கை

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் விளம்பரதாரர் பெயர்களை நீக்கி காவல் நிலையங்களில் புதிய பலகை வைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள சில காவல் நிலையங்களில் தனியார் விளம்பர பலகைகள் இடம் பெற்றிருப்பது பொதுமக்கள் பார்வையில் தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, அனைத்து காவல் நிலைய பெயர் பலகைகளில் காவல் நிலைய பெயரை தவிர, விளம்பரதாரரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக புதிய பெயர் பலகையை வைக்க வேண்டும். காவல் நிலைய பெயர் பலகையை வைக்க காவல் நிலைய முன்பணத்தை செலவிட்டு கொள்ளலாம் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தார்.

அதன்பேரில், தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் விளம்பர பலகைகளில் தனியார் விளம்பரதாரர் பெயர் இடம் பெற்று இருந்தை உடனடியாக அகற்றினர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தனியார் விளம்பரதாரரின் பெயர்களுடன் உள்ள பெயர் பலகைகளை உடனடியாக மாற்றி வைக்குமாறு எஸ்பி செல்வகுமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் காவல் நிலையங்களில் விளம்பரதாரர் பெயர் நீக்கி புதிய தகவல் பலகைகளை வைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புதிய தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து காவல் நிலையங்களிலும் இப்பணி நிறைவு பெறும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>