×

தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழா; 100 ஆண்டுகாலம் கம்பீரமாக வெற்றி பயணத்தை தொடர்ந்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தென்னிந்திய திருச்சபை 100 ஆண்டுகாலம் தனது வெற்றிபயணத்தை தொடர்ந்திட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு விழா ராயப்பேட்டையில் உள்ள தூய ஜார்ஜ் பேராலயத்தில் இன்று காலை நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பிரதமப் பேராயர் தர்மராஜ் ரசாலம் தலைமை தாங்கினார். சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் முன்னிலை வகித்தார். மேலும் நிகழ்ச்சியில் எம்பிக்கள், எல்.எல்.ஏக்கள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பேராய துணைத்தலைவர் அசோக் குமார், பேராய செயலாளர்கள் மேன்யல் எஸ்.டைட்டஸ், ஏசுதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பாரம்பரியமிக்க தென்னிந்திய திருச்சபைக்கு என்னுடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். திறந்த உலகில் சிறந்த திருச்சபை. அனைவரும் சேர்ந்து எதிர்நோக்குவோம் என்ற பொருளில் கொண்டாடப்படுகிற தென்னிந்திய திருச்சபை பவள விழாவினை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாடு முழுவதும் கல்வி மற்றும் மருத்துவமனைகளை உருவாக்கி அனைவருக்கும் மருத்துவம் என்ற லட்சிய பாதையில் வெற்றிப்பயணம் செய்திருக்கக்கூடிய இந்த திருச்சபை தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் கிடைத்த அறிய கருவூலம்.

சமுதாய பணிகளை ஒரு இயக்கமாக தமிழக மக்களுக்கு அளித்து வரும் இந்த திருச்சபைக்கு என்னுடைய சார்பில் குறிப்பாக தமிழக அரசு சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் மத நல்லிணத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் ஏற்ற சாதி, சமயமற்ற சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக தென்னிந்திய திருச்சபை ஆற்றியுள்ள பணிகளை நன்றியுனர்வோடு நினைவுகூர்ந்து தென்னிந்திய திருச்சபை இன்னும் 100 ஆண்டுகாலம் கம்பீரமாக தனது வெற்றி பயணத்தை தொடர்ந்திட முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் எனது முழு மனதோடு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு உங்களால் உருவாக்கப்பட்ட அரசு. இதை எனது அரசு என்று சொல்லமாட்டேன். இது நம்முடைய அரசு. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிற போது பெரும்பான்மை இடங்களில் திமுக வெற்றிபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற செய்தி வருகின்ற போது ‘அமைய உள்ள ஆட்சி மக்களுக்கு பணியாற்றக்கூடிய ஆட்சியாக இருக்கும்’ என நான் அப்போதே சொன்னேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமில்லை வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து என்னுடைய பணி அமையும். தேர்தல் நேரத்தில் போட்டியிடக்கூடிய கட்சிகள் எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை வாக்குறுதிகளாக வழங்குவது வழக்கம்.

ஆனால், திமுகவை பொருத்தவரையில் சொன்னதை தான் செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என்ற அடிப்படையில் வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டிருக்கிறோம். நடந்து முடிந்த பொதுத்தேர்தலை பொறுத்தவரையில் ஏரக்குறைய 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கினோம். 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் இன்றைக்கு 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என கம்பீரமாக வெளியே சொல்கிறோம். மக்களுக்கு பணியாற்றக்கூடிய அரசாக இந்த அரசு என்றைக்கும் இருக்கும். இவ்வாறு பேசினார்.



Tags : 75th Annual Coral Festival ,the Church of South ,India ,Chief Minister ,MK Stalin , 75th Annual Coral Festival of the Church of South India; We must continue the journey of victory majestically for 100 years: Chief Minister MK Stalin's speech
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...