×

சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைப்பதை கண்டித்து டிஎஸ்பி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை-ஆரணியில் பரபரப்பு

ஆரணி : சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைப்பதை கண்டித்து டிஎஸ்பி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.ஆரணி  டவுன்  பெரியார் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். மேலும்,  பெரியார் நகர் அருகில்  காந்தி நகர் பகுதி மக்களுக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. அப்பகுதியில் உள்ள சுடுகாடு பகுதியை சிலர் ஆக்கிரமித்து சமாதிகளை சேதப்படுத்துவதாக கூறி, ஆக்கிரமிப்பை தடுக்க காந்தி நகரை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக காந்தி நகரை சேர்ந்த பொதுமக்கள் சுடுகாடு சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் நகரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆரணி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, டிஎஸ்பி அலுவலக வேலையாக வெளியில் சென்றிருந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆரணி பயிற்சி டிஎஸ்பி ரூபன்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உறுதியளித்தனர். மேலும், டிஎஸ்பி வந்தவுடன் தாசில்தாரிடம் தகவல் தெரிவித்து இரு தரப்பினரிடமும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் அரைமணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Arani , Arani: The public besieged the DSP's office condemning the construction of a perimeter wall for the fire. Arani Town Periyar Nagar
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...