காணிப்பாக்கம் கோயிலில் 17ம் நாள் பிரமோற்சவம் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய வரசித்தி விநாயகர்-இன்று கல்ப விருட்ச வாகனத்தில் அருள்பாலிப்பு

சித்தூர் :  காணிப்பாக்கம் கோயிலில் பிரமோற்சவத்தின் 17ம் நாளான நேற்று காமதேனு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி அருள்பாலித்தார். இன்று கல்ப விருட்ச வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை மறுநாள் தொடங்கி பிரமோற்சவம் 21 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நாடு முழுவதும் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் 10 நாட்கள் மட்டுமே  பிரமோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், காணிப்பாக்கம் வரசித்தி  விநாயகர் கோயிலில் மட்டும் 21 நாட்கள் பிரமோற்சவம் நடத்தப்படுவது  தனிச்சிறப்பு.

அதன்படி, இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை மறுநாளான கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கி நடந்து வருகிறது. பிரமோற்சவத்தின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி, பிரமோற்சவத்தின் 17வது நாளான நேற்று காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, இரவு காமதேனு வாகனத்தில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 4 மாட வீதியிலும் உலா வந்து அருள்பாலித்தார்.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பிரமோற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல், பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முக கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பிரமோற்சவத்தின் 18ம் நாளான இன்று இரவு கல்ப விருட்ச வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Related Stories:

More