உடையார்பாளையம் அருகே விவசாயி விஷம் குடித்து பலி-உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம் : அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த இடையார் ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (62), விவசாயி. இவர் உடையார்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவரின் தேவைக்காக அதே ஊரைச் சேர்ந்த சங்கர் மூலம் மேலக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரிடம் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

ஒரு வருடம் கடந்த நிலையில் சுப்பிரமணியன் பணத்தை கேட்க செந்தில் வீட்டிற்கு சென்று பார்த்த போது செந்தில் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த சுப்பிரமணியன் கடந்த 21ம் தேதி வீட்டில் விவசாய நிலத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயக்க நிலையில் கிடந்தார். பின்னர் உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கந்து வட்டி கேட்டதால் அவர் உயிர் இழந்ததாக கூறி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து உடையார்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஏந்தல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைக்கதிரவன் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories:

More
>