×

நாடு தழுவிய சாதிவாரி மக்‍கள்தொகை கணக்‍கெடுப்பு காலத்தின் கட்டாயம்; நாட்டின் நலனுக்கானது!: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேச்சு

பாட்னா: நாடு தழுவிய சாதிவாரி மக்‍கள்தொகை கணக்‍கெடுப்பு காலத்தின் கட்டாயம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். சாதிவாரி மக்‍கள்தொகை கணக்‍கெடுப்பு நடத்துவது நிர்வாக ரீதியாக சிரமமானதும், சிக்கலானதாகும் என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 2011ம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் தவறுகளும், சரியான தரவுகளும் கிடைக்கவில்லை என்று பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாதிவாரி மக்‍கள்தொகை கணக்‍கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதும், முறையானதுமாகும் என நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார், சாதிவாரி மக்‍கள்தொகை கணக்‍கெடுப்பு நாட்டின் நலனுக்கானது என்று கூறினார். கணக்கெடுப்புக்கு எதிரான முடிவை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பீகாரில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இந்த பிரச்சனையின் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஓரணியில் திரள பாஜக அல்லாத முதலமைச்சர்கள் உள்பட 33 தலைவர்களுக்கு பீகார் எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.  சாதிவாரி கணக்‍கெடுப்பு நடத்த ஒரு தார்மீக காரணத்தையாவது ஒன்றிய அரசு தெரிவிக்க முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Bihar ,Chief Minister ,Nitish Kumar , Sativari Population Census, Bihar Chief Minister Nitish Kumar
× RELATED ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது: பீகாரில் பரபரப்பு