மழை காலம் துவங்கும் முன் ஆறுகளை சீரமைக்க வேண்டும்-கமுதி பகுதி விவசாயிகள் வலியுறுத்தல்

சாயல்குடி : கமுதி பகுதியிலுள்ள நீர் ஆதாரங்களை கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, தூர்ந்து போய், பெருக்கெடுத்து ஓடிய நதி இன்று சிறு ஓடையாக மாறி வருவதால், மழைக்காலம் துவங்கும் முன் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக நடைபெறும் கமுதி பகுதியில் முக்கிய நீர் ஆதாரங்களாக கிருதுமால் நதி, குண்டாறு விளங்குகிறது. இந்த நீர் ஆதாரங்கள் கடந்த 60 ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி கிடப்பதால், கண்மாய் குளங்களால் பயனடையாமல், மானாவாரி எனப்படும் பருவ மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படுகிறது.

மழை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மகாலிங்க மலை பகுதிகளிலிருந்து உருவாகி வரும் காட்டாற்று தண்ணீர் மற்றும் மதுரை வைகை ஆறு கிளை வழியாக கமுதி பகுதி விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் பருவமழை குறைய தொடங்கியது. நீர் வரத்தும் தடைபட்டது.

பல வருடங்களாக நீர் ஆதாரங்கள் முறையாக தூர்வாரப்படாமல் கிடப்பதால் சீமைகருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து ஆக்கிரமித்து கிடக்கிறது. மேலும் ஆற்று பகுதியில் தனியார்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்தல், தொடர்ந்து நடந்து வரும் மணல் கொள்ளை போன்ற காரணங்களால் தற்போது ஆறு, கால்வாய்கள் இருக்கும் தடம் தெரியாமல் சிறு ஓடைகளாக மாறி வருகிறது.

ஆறுகளிலிருந்து பிரிந்து கண்மாய்களுக்கு செல்லும் கால்வாய்களும், கண்மாய்களிலிருந்து விவசாய நிலங்களுக்கு செல்ல அமைக்கபட்டுள்ள தத்துகள், மடைகள், மதகுகள், சிறு பாலங்கள் முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. இதுபோன்ற காரணங்களால் மழை காலங்களில், காட்டாற்றில் தண்ணீர் வந்தாலும் கூட, முறையான வழித்தடங்களின்றி, கண்மாய், குளங்கள் பெருகுவது கிடையாது.

அவற்றை சேமித்து வைப்பதற்கும் ஆறுகளில் தடுப்பணைகள் இல்லாததால் மழை தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கிறது. இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் விவசாயம் நாளுக்குநாள் அழிவை நோக்கி செல்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.எனவே மழை தண்ணீரை சேமிப்பதற்கு ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றவேண்டும். ஆறுகளை தூர்வார வேண்டும். மணல் கொள்ளை மற்றும் ஆக்கிரமிப்புகளை தடுக்கவேண்டும் என விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories: