வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் போராட்டத்தால் ஸ்தம்பிக்கும் தலைநகர் டெல்லி!: போக்குவரத்து நெரிசலில் சிக்கி திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்..!!

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்திவரக்கூடிய முழு அடைப்பு போராட்டத்தால் டெல்லியே ஸ்தம்பித்து இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் திக்குமுக்காடுகின்றனர். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  விவசாய சங்கங்களை பொறுத்தவரையில் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதியிலிருந்து தலைநகர் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர். மழை, வெயிலை பொருட்படுத்தாமல் கடந்த 10 மாதங்களை கடந்து இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ரயில் மறியல், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டம், டிராக்டர் பேரணி உள்ளிட்ட பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தியும் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு தற்போது வரை செவிசாய்க்கவில்லை.

இதையடுத்து, இன்று ஒருநாள் அடையாள பாரத் பந்த்-திற்கு 40 சங்க பிரதிநிதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். நாடு தழுவிய வேலை நிறுத்தம் காலை 6 மணி முதல்  தொடங்கியது . அரியானா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு முக்கிய எதிர்கட்சிகளான காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து கொண்டிருக்கின்றன.

தலைநகர் டெல்லியை சுற்றியுள்ள சிங்கூ, காசிப்பூர் உள்ளிட்ட எல்லை பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் இருந்து அரியானா வழியாக ராஜஸ்தான் மாநிலம் செல்லும் முக்கிய பகுதியாக உள்ள குருகுராமில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். சாலைமறியல் போராட்டம் என்பது 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மறியல் காரணமாக பல கி.மீ. தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. விவசாயிகள் அனைத்து வழிகளையும் மறித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குருகிராம், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் ஏராளமான கார்கள் ஊர்ந்து செல்கின்றன.

Related Stories:

More
>