காங். அரசின் அமைச்சரவை விஸ்தரிப்பு பஞ்சாப்பில் 15 அமைச்சர்கள் பதவியேற்பு

சண்டிகர்: பஞ்சாப்பில் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் அரசின் அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டது. 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பஞ்சாப்பில் அமரீந்தர் சிங் பதவி விலகியதைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி கடந்த வாரம் பதவியேற்றார். அவருடன் துணை முதல்வர்களாக சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, ஓ.பி. சோனி ஆகியோர் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்தது. இதற்காக முதல்வர் சரண்ஜித் சிங் 3 முறை டெல்லிக்கு பயணம் செய்து கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்தினார்.

நேற்று முன்தினம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் அவர் தொலைபேசியில் ஆலோசனை நடத்தி அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்தார். இந்நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை நடந்தது. இதில், 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ரன்தீப் சிங் நாபா, ராஜ் குமார் வெர்கா, சங்கத் சிங் ஜில்ஜியன், அமரிந்தர் சிங் ராஜா வர்ரிங், குக்ரிரத் கோட்லி ஆகியோர் புது முகங்கள் ஆவர். அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் சட்டப்பேரவை நடக்க உள்ள நிலையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* சர்ச்சைக்குரிய அமைச்சர்

அமரீந்தர் சிங் அமைச்சரவையில் இடம் பெற்ற முன்னாள் அமைச்சர் ரானா குர்ஜீத் சிங்கும் நேற்று அமைச்சராக பதவியேற்றது சர்ச்சையாகி இருக்கிறது. பஞ்சாப் எம்எல்ஏ.க்களில் மிகப்பெரிய பணக்காரர் இவர்தான். இவர் மீது 2018ம் ஆண்டு அமரீந்தர் ஆட்சியில் சுரங்க ஊழல் உள்ளிட்ட லஞ்ச புகார்கள் எழுந்தன. இதனால், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து 6 எம்எல்ஏக்கள் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுக்கு கடிதம் எழுதினர். ஆனாலும், அவர் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

* மீண்டும் அதிருப்தி அலை

முந்தைய அமரீந்தர் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு பதவி தரப்படாததால், பஞ்சாப் காங்கிரசில் மீண்டும் அதிருப்தி அலை வீசத் தொடங்கி உள்ளது. முந்தைய அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பல்பீர் சித்து, ‘என்னை ஏன் அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு தரவில்லை? கொரோனாவை நான் கையாண்ட விதம் சிறப்பாக இருப்பதாக கனடா நாடாளுமன்றத்திலயே எம்பிக்கள் பாராட்டினர்,’ என டிவிட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Related Stories:

More