×

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி: கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்.6 மற்றும் 9 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்களுக்கு சின்னங்கள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது,
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கூட்டுறவு அச்சகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கு 4 வண்ணங்களிலும், கூடுதல் வார்டு உறுப்பினர்களின் போட்டி எண்ணிக்கை அடிப்படையில் மேலும் ஒரு வண்ணத்தில் என ஐந்து வகையான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குபதிவு நாளுக்கு குறைந்த கால அவகாசமே உள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் வாக்குச் சீட்டு அச்சடிக்கப்படுவதால் அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தீ விபத்து மற்றும் பேரிடர்களை தவிர்க்க தீயணைப்பு துறை வாகனம் நிறுத்தப்பட்டு ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல் கிராம ஊராட்சி செயலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் அவ்வப்போது கிராம ஊராட்சிகளில் போட்டியிடும் நபர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் சரியாக அச்சடிக்கப்படுகிறதா என்பதையும் கவனித்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் நாராயணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தேர்தல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Ballot Printing for Local Elections: Collector Review
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்