உபி.யில் யோகி அமைச்சரவை விரிவாக்கம் ஜிதின் பிரசாதா உள்ளிட்ட 7 அமைச்சர்கள் பதவியேற்பு: பிராமணர் வாக்குகளை கவர வியூகம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசின் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரசில் இருந்து பாஜ.வில் இணைந்த ஜிதின் பிரசாதா உள்ளிட்ட 7 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த 6 மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. நாட்டிலேயே அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் என்பதால் உபி.யின் வெற்றியை அனைத்து கட்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றன. அந்த வகையில், உபி.யில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜ காய் நகர்த்தி வருகிறது.

இதற்காக, தேர்தல் நெருங்கும் நிலையில், சாதி ஓட்டுக்களை கவரவும், மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவி தரும் விதமாகவும், யோகி அரசின் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்படி, ஜிதின் பிரசாதா, சஹத்ரா பால் சிங், பால்டு ராம், சங்கீதா பல்வந்த், சஞ்சீவ் குமார், தினேஷ் காதிக், தரம்வீர் சிங் ஆகிய 7 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜிதின் பிரசாதா, கடந்த ஜூன் மாதம் காங்கிரசில் இருந்து பாஜ.வுக்கு தாவியவர்.

ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவரான ஜிதின் பிரசாதா, பிரமாண சமூகத்தை சேர்ந்தவர். உபி.யில் 13 சதவீத பிரமாணர்கள் உள்ளனர். எனவே, அவர்களின் ஓட்டுக்களை மொத்தமாக கவர ஜிதின் பிரசாதாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவருக்கு கேபினட் அமைச்சராக முக்கிய துறை ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உபி சட்டப்பேரவையில் அதிகபட்சம் 60 அமைச்சர்களை நியமிக்க முடியும். தற்போது 53 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இதில் கூடுதலாக 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜ 325 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 54 தொகுதியிலும், பகுஜன் சமாஜ் 19 தொகுதியிலும் வென்றன.

* இம்முறை 350 தொகுதிகளில் வெல்வதை பாஜ இலக்காக நிர்ணயித்துள்ளது.

Related Stories:

More
>