×

சாரை சாரையாக வரும் மக்களால் தமிழகத்தில் திருவிழா போல் நடக்கும் தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

திருச்சி: சாரை சாரையாக வரும் மக்களால் தமிழகத்தில் திருவிழா போல் தடுப்பூசி முகாம் நடக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். திருச்சியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முகாமை துவக்கி வைத்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாமை பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா நடக்கிறது என்று கூறும் வகையில் முகாம்கள் பல்வேறு மாவட்டங்களில் காலையிலேயே பொதுமக்கள் சாரைசாரையாக வந்து தடுப்பூசி செலுத்தி சென்றனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தமிழக முதல்வரை வேதனைக்குள்ளாக்கியது. மாணவர்கள், பெற்றோருக்கு கவுன்சிலிங் தந்து மனு அழுத்தத்தை போக்க வேண்டும் என்றார். அந்த வகையில் தமிழகத்தில் நீட்தேர்வு எழுதிய 1,10,971 பேருக்கு ஆலோசனை வழங்க 333 மன நல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 80 சதவீதம் பேரிடம் பேசி உள்ளனர். 20 சதவீதம் மாணவர்கள் போனை எடுக்கவில்லை. அவர்களிடமும் தொடர்ந்து முயற்சி செய்து பேச முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் 200 குழந்தைகள் மன அழுத்தத்தில் இருப்பதை கண்டறிந்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகள், பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இதுபோன்ற ஒரு நல்ல நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கடந்த 11ம் தேதிப்படி 48 சதவீதம் மட்டுமே இருந்தனர். செப்.12ம் தேதி முகாம் நடத்திய ஒரே நாளில் 54 சதவீதம் என்ற வகையில் உள்ளது. தற்போது 56 சதவீதம் முதல் தவணையும், 17 சதவீதம் 2வது தவணையும் போடப்பட்டுள்ளது. மேலும் தவணை சதவீதம் 60ஐ கடக்கும். தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பது உண்மை. வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக முதல்வர், ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை, முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அடுத்த ஊரடங்கு கூட்டத்தில் இதுகுறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி முடிவுகள் அறிவிப்பார். நீட் தேர்வு மசோதா தமிழக ஆளுநரிடமிருந்து ஜனாதிபதி கைக்கு செல்ல வேண்டும். அதன்பிறகு அவரை சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Sarai Sarai ,Minister ,Ma Subramanian , Vaccination camp like a festival in Tamil Nadu by the people who come to Sarai Sarai: Minister Ma. Subramanian is proud
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...