×

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாகு நியமனம்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்தவர் வெங்கடாச்சலம். இவர் கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவியில் இருந்த நிலையில் இவர் மீது பல்வேறு முறைகேடுகள் கூறப்பட்டது. குறிப்பாக, பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அவசரஅவசரமாக தடையில்லா சான்று  வழங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்தநிலையில், வெங்கடாசலத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

 இந்த சோதனையில் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.15 லட்சம் கட்டுக்கட்டாக ரொக்க பணம், தங்க நகைகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர். அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்துவரும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 இந்தநிலையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகுவை நியமனம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை செயலாளராக சுப்ரியா சாகு இருந்து வருகிறார். இந்தநிலையில் அவருக்குக் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags : Supriya Sagu ,Tamil Nadu Pollution Control Board ,Tamil Nadu Government Action , Tamil Nadu, Pollution Control Board, Supriya Sagu, Action
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...