‘குலாப்’ புயல் கரை கடந்தது

சென்னை: வங்கக்கடலில் 2 நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுப்பெற்று நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு குலாப் என்று பெயரிடப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி இந்த புயல் கோபால்பூருக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 180 கிமீ தொலைவில் மையம் கொண்டு இருந்தது. இது ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் கலிங்கப்பட்டினம்-கோபால்பூருக்கு இடையே  நேற்று இரவு கரையைக் கடந்தது. இந்த குலாப் புயல் காரணமாக வங்கடல் பகுதி மற்றும் கடலோர மாவட்டங்களில் இருந்த ஈரப்பதம் உறிஞ்சப்பட்டதால் தமிழகத்தில் நேற்று பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. சென்னையில்  வானம் பொதுவாக மேகமூட்டமாக இருந்தது.

இந்நிலையில் தேனி, திண்டுக்கல், தென் காசி,மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக இன்று, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடியமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யும்.

Related Stories:

More