×

சென்னை, மதுரை உயர்நீதி மன்ற கிளைக்கான பணியாளர்கள் நியமன தேர்வுக்கு பட்டதாரிகள் குவிந்தனர்: ஆண்களை விட பெண்கள் அதிகம் பங்கேற்பு

சென்னை: சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் 3,557 உதவியாளர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு நேற்று நடந்தது. அதிக அளவில் இந்த தேர்வில் பட்டதாரிகள் குவிந்தனர். இத்தேர்வு எழுத வந்தவர்களுடன் அதிக அளவில் உதவிக்கு அழைத்து வரப்பட்டவர்கள்  வந்ததால் தேர்வு மையங்களில் கூட்டம் அலைமோதியது. சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் 3,557 உதவியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு, கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. ஆன்லைன் மூலம் ஜூலை மாதம் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பின்படி அலுவலக உதவியாளர்கள் 1,911, வாட்ச்மேன்கள் 496, இரவுக் காவலர்கள் 185, இரவுக் காவலர்கள் மற்றும் மாசால்ஜிகள் 108, வாட்ச்மேன் மற்றும் மாசால்ஜிகள் 15, துப்புரவாளர்கள் 189, நகல் எடுக்கும் உதவியாளர்கள் 3, தூய்மைப் பணியாளர்கள் 110, துப்புரவாளர்கள் 24, தோட்டப்பணியாளர்கள் 28, பெண் காவலர்1, மாசால்ஜிகள் 485 என மொத்தம் 3557 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இதற்கான தேர்வுகள் இரண்டு வகையில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு  இருந்தது. இந்த தேர்வு எழுத தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து  இருந்த நிலையில் இரண்டு நாட்களாக இந்த தேர்வு நடந்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரி, அடையாறில் உள்ள சட்டப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடந்தது.  தேர்வுக்கு 8ம்  வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு அடிப்படை கல்வித் தகுதியாக வைக்கப்பட்டு இருந்தாலும்  மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் தொடங்குவதால் பட்டப் படிப்பு படித்தவர்கள் அதிக அளவில்  இந்த தேர்வில் பங்கேற்றனர். அதே போல பொறியியல் பட்டதாரிகளும் இந்த தேர்வில் பங்கேற்றனர்.

தேர்வு எழுத வந்தவர்களுடன் உறவினர்களும்  பெற்றோரும் வந்ததால் தேர்வு மையங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கும் அளவுக்கு நெரிசல் காணப்பட்டது. மேற்கண்ட தேர்வு எழுத வந்தவர்களில் அதிக அளவில் பெண்கள் வந்திருந்தனர். அவர்களல் பல பேர் கைக் குழந்தைகளுடன் வந்திருந்ததால் அவர்கள் தேர்வு அறைக்குள் சென்றதால் அந்த குழந்தைகளை பார்த்துக் கொள்ள உதவிக்கு வந்தவர்கள் தேர்வு மைய வளாகத்தில் குவிந்தனர். இதனால் தேர்வு மைய வளாகம் நேற்று காலையில்  இருந்தே திருவிழா நடக்கும் இடம் போல காட்சியளித்தது. இந்நிலையில், தேர்வு எழுத வந்தவர்களை அங்குள்ள மைதானத்தில் அமர வைத்து ஹால்டிக்கெட்டுகளை சரிபார்த்து உள்ளே அனுப்பினர்.

Tags : Chennai ,Madurai , Chennai, Madurai, High Court, Recruitment of Staff, Women
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை