×

செப்டம்பரில் 1.35 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல்

சென்னை: சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 3 வது மெகா தடுப்பூசி முகாமும் வெற்றிகரமாக நடந்தது. கடந்த 12ம் தேதி நடைபெற்ற முதல் மெகா தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 தடுப்பூசிகளும், 19ம் தேதி நடந்த 2 வது மெகா தடுப்பூசி முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது. அந்தவகையில் இன்று (நேற்று) நடந்த 3 வது மெகா தடுப்பூசி முகாமில் 15 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சென்னையில் இன்று (நேற்று) 5 இடங்களில் முதலமைச்சர் தடுப்பூசி முகாம்களை ஆய்வு மேற்கொண்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். தமிழகத்தில் செப்டம்பர் மாதம் மட்டும் அதிகபட்சமாக இதுவரை 1.35 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாம்களில் பணியாற்றி வந்த சுகாதார பணியாளர்களுக்கு நாளை (இன்று) ஒருநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : September, Vaccination, Department of Public Welfare, Secretary
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...