×

ஓராண்டுக்கான பதவிக்காலம் முடிவதால் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் 24 புதிய தலைவர்கள் யார்? தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்

புதுடெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கான ஓராண்டு பதவிகாலம் முடிவதால், புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில், காங்கிரஸ் கட்சி எம்பிக்களின் எண்ணிக்கை சரிவால் கடும் பின்னடைவை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து ஒன்றிய அமைச்சகங்களின் திட்டப் பணிகளை மேற்பார்வையிட 24  நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலைக்குழுக்களுக்கு  தேர்வு செய்யப்படுவோரில் 16 பேர் மக்களவையின் அதிகார வரம்பிலும், மீதமுள்ள  எட்டு பேர் மாநிலங்களவையின் அதிகார வரம்பிலும் வருவர். ஒவ்வொரு நாடாளுமன்ற குழுவும், ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும்  மறுசீரமைக்கப்படுகின்றன. தற்போதுள்ள அனைத்து நாடாளுமன்ற நிலைக்குழுக்களும்  கலைக்கப்பட்டு, புதிய நாடாளுமன்ற குழுக்களுக்கான எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான  ஏற்பாடுகளை மக்களவை, மாநிலங்களவை செயலகங்கள் தொடங்கியுள்ளன.
நிலைக்குழுவின் தலைவர் பதவியானது, மாநிலங்களவையிலும், மக்களவையிலும் ஒவ்வொரு கட்சியின் ஒருங்கிணைந்த எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.

மேற்கண்ட நிலைக்குழுவின் தலைவர்களை தேர்வு செய்யும் அதிகாரம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அல்லது மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோருக்கு உண்டு. இவர்களால் பரிந்துரைக்கப்படும் எம்பியே நிலைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக அறிவிக்கப்படுவார். இந்த பரிந்துரைகளுக்கு முன்னதாக கடுமையான ஒதுக்கீட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. தற்போது, புதிய நிலைக்குழுவை தேர்வு செய்யும் செயல்முறைகள் இறுதி கட்டத்தில்  உள்ளதாக நாடாளுமன்ற செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நாடாளுமன்ற செயலக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தின்  இரு அவைகளிலும் ஒவ்வொரு கட்சியின் பலத்தின் அடிப்படையில், நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவி முடிவு  செய்யப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் பலத்தை 24 அல்லது துறை தொடர்பான  நிலைக்குழுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகுத்தால் எந்தெந்த கட்சிக்கு தலைவர் பதவி கொடுக்கலாம் என்பது தெரிந்துவிடும். 24 நிலைக்குழு மட்டுமின்றி, மற்ற நிலைக்குழுக்களும் உள்ளன. அதில் எம்பிக்கள்  பொறுப்பாளர்களாக பரிந்துரைக்கப்படுகிறார்கள். பொதுக் கணக்குக் குழுவுக்கு  காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் சவுத்ரி தலைமை வகிக்கிறார். கடந்த 2019ம் ஆண்டில் மாநிலங்களவையில் 56 உறுப்பினர்களை பெற்றிருந்த காங்கிரஸ் தற்போது 33  எம்பிக்களை மட்டுமே வைத்துள்ளது. அதே மக்களவையில் 52 எம்பிக்கள் உள்ளனர். இதன் அடிப்படையிலும், மாநிலங்களவையில்  பாஜகவின் எண்ணிக்கை மேலும் உயரும் என்பதால், தற்போது நிர்வகித்து வரும் மூன்று  நிலைக்குழுக்களில் காங்கிரஸ் கட்சி தனது தலைவரைத் தக்க வைத்துக் கொள்ள  முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வரும் சில மாதங்கள் வரை இந்த மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்டாலும் கூட, அடுத்த ஆண்டு அந்த இடங்களை தக்க வைத்திருப்பது கடினம்.

காங்கிரஸ் கட்சியாவது தற்போது உள்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும்  சுற்றுச்சூழல் துறைகளுக்கான நிலைக்குழு தலைவர் பதவியை வகித்து வருகிறது.  இன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களின் எண்ணிக்கை 20க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் குறைந்துள்ளதால், அக்கட்சிக்கான நாடாளுமன்ற தலைவர் பதவிகள் மீண்டும் மூன்று இடங்கள் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். அதேபோல், கடந்த 2014ம் ஆண்டில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 34 இடங்கள் இருந்தன. அதே 2019ம் ஆண்டில் 28 ஆக குறைந்தது. அதனால், அக்கட்சியின் உறுப்பினர்கள் இரண்டு நிலைக்குழுவுக்கு தலைவராக இருந்த நிலையில், தற்போது ஒரு பதவியை மட்டுமே தக்கவைத்துள்ளது. இப்போது உணவு மற்றும் நுகர்வோர் விவகாரக் குழுவின் தலைவராக சுதீப் பந்த்யோபாத்யாய் செயல்பட்டு வருகிறார். இவ்வாறாக இன்றைய நிலையில் சில மாநில கட்சிகளின் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அந்த கட்சிகளுக்கு நிலைக்குழு தலைவர் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Who are the 24 new chairpersons of Parliamentary Standing Committees as their one-year term ends? Intensity of selection tasks
× RELATED கேரளாவில் நடந்த மாதிரி...