×

சுருளியாறு மின்நிலையத்தில் குடியிருப்பு பகுதியில் யானைகள் ‘விசிட்’ பகல் நேரத்தில் உலா வருவதால் பீதி

கூடலூர்: சுருளியாறு மின்நிலையத்தில், குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் காட்டுயானைகள் உலா வருவதால், பொதுமக்கள், மின்நிலைய பணியாளர்கள் பீதியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பத்தை அடுத்துள்ள சுருளி அருவி அருகே சுருளியாறு மின்நிலையம் உள்ளது. இப்பகுதி மேகமலை வனஉயிரின சரணாலய பகுதியாகும். இங்கு இரவங்கலாறு அணை தண்ணீர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மிண்நிலையத்தில் பணிபுரிவோர் தங்களுக்கு தேவைக்காக அருகில் உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, கம்பம், கூடலூர் ஆகிய ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

இப்பகுதியில் 1974ல் ஆரம்பப்பள்ளியும் தொடங்கப்பட்டது. இந்த மின்நிலைய வனப்பகுதியை ஒட்டி, ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் வாழை, கொட்டை முந்திரி, மா உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டி விளைநிலங்கள் இருப்பதால் அவ்வப்போது யானை, காட்டுஎருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரங்களில் உணவு தேடி வந்து விளைநிலத்தை நாசம் செய்கிறது. இந்நிலையில், சுருளியாறு மின்நிலைய குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களிலேயே காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் முதல் யானைக்கூட்டம் பகல் நேரத்திலேயே குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இதனால், மின்நிலைய பணியாளர்கள் உயிர் அச்சத்துடன் பணிக்குச் செல்கின்றனர். பகல் நேரங்களிலேயே யானைகள் நடமாடுவதால் மின்நிலைய குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுருளியாறு மின்நிலைய பகுதியில் 70 குடும்பத்தினருக்கு மேல் உள்ளோம். குடியிருப்பு பகுதியில் பகல் நேரங்களிலேயே யானைகள் உலா வருகின்றன.

இதனால், வீட்டை விட்டு வெளியே வரவோ, குழந்தைகளை வெளியே விளையாட விடவோ அச்சமாக உள்ளது. இதேபோல, மின்நிலையத்திற்கு வேலைக்குச் செல்பவர்களும் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே, யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Suruliyaru power station , Panic as elephants ‘visit’ the residential area at the Spiral Power Station during the day
× RELATED சுருளியாறு மின்நிலையத்தில்...