தோகைமலை நல்லாகவுண்டம்பட்டி பிரிவு சாலையில் ஆக்கிரமிப்பு கடை, மைய பகுதியில் உள்ள வேப்ப மரம்: அகற்ற மக்கள் வலியுறுத்தல்

தோகைமலை: கரூர்மாவட்டம் தோகைமலையில் இருந்து மணப்பாறை குளித்தலை மெயின் ரோட்டில் உள்ள தோகைமலை சமுதாயக்கூடம் அருகே நாகனூர் ஊராட்சி நல்லாகவுண்டம்பட்டி, மனச்சணம்பட்டி, கம்பத்தாம்பாறை ஆகிய கிராமங்களுக்கு பரிவு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக நல்லாகவுண்டம்பட்டி, மனச்சணம்பட்டி, கம்பத்தாம்பாறை ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களும் தோகைமலை தெற்கு வேதசலபுரத்தில் வசிக்கும் பொதுமக்களும் சென்று வருகின்றனர்.

மேலும் தோகைமலையில் உள்ள நல்லாக்கவுண்டம்பட்டி பிரிவு சாலையில் தனியார் திருமணம் மண்டபம், தனியார் பால் நிறுவனம் உள்ளதாலும், நல்லாகவுண்டம்பட்டி, மனச்சணம்பட்டி, கம்பத்தாம்பாறை ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கூலிவேலைகள் உள்பட பல்வேறு தேவைகளுக்காக தோகைமலைக்கும், தோகைமலை வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்வதற்கு நல்லாக்கவுண்டம்பட்டி பிரிவு சாலையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் தோகைமலையில் குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டில் இருந்து பிரியும் நல்லாகவுண்டம்பட்டி ரோட்டின் மைய பகுதியில் வேப்பமரம் அமைந்து உள்ளது. இதை பயன்படுத்தி கொண்டு ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனால் நல்லாகவுண்டம்பட்டி ரோட்டை கடக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும் இச்சாலையில் ஆக்கிரமிப்பு உள்ளதால் சாலை குறுகலாக அமைந்து உள்ளது. இதனால் கனரக வாகனங்கள், தனியார் பள்ளி கல்லூரி பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளதாகவும், இதனால் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஆக்கிரமிப்பு செய்து உள்ள கடைகளையும், அதே இடத்தில் உள்ள வேப்பமரத்தையும் அகற்றிவிட்டு தோகைமலையில் தொடங்கும் நல்லாகவுண்டம்பட்டி பிரிவு சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். தற்பொழுது நாகனூர் முதல் தோகைமலை வரை உள்ள நல்லாக்கவுண்டம்பட்டி சாலையில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதனால் தோகைமலையில் உள்ள நல்லாகவுண்டம்பட்டி பிரிவு சாலையில் ஆக்கிரமிப்பு செய்து உள்ள கடைகளையும், வேப்பமரத்தையும் அகற்றிவிட்டு சாலையை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More