×

பட்டிவீரன்பட்டி அருகே பப்பாளி மரங்கள் அழிப்பு: போதிய விலையில்லை என புலம்பல்

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு, நல்லாம்பிள்ளை, அய்யம்பட்டி, செங்கட்டான்பட்டி பகுதிகளில் நாட்டு பப்பாளி ரக மரங்களை விவசாயிகள் அதிகளவில் நட்டுள்ளனர். தற்போது இந்த பப்பாளி மரங்களிலிருந்து 4 நாட்களுக்கு ஒரு முறை காய்க்கும் பப்பாளிகளை பறித்து அதனை மதுரை, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் பப்பாளி பழங்களுக்கு போதிய விலை கிடைக்காத காரணத்தினால், விவசாயிகள் பப்பாளிகளை மரத்திலேயே பறிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் பப்பாளி பழங்கள் மரத்திலேயே பழுத்து அழுகி வீணாகி வந்தன. செங்கட்டான்பட்டி பகுதியில் உள்ள பப்பாளி மரங்களை டிராக்டர்களை கொண்டு விவசாயிகள் அகற்றி வருகின்றனர்.

இதுகுறித்து செங்கட்டான்பட்டியை சேர்ந்த விவசாயி கூறுகையில், ‘பப்பாளி பழங்களை பறித்து, அதனை வண்டியில் ஏற்றி மதுரை, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளுக்கு மொத்த வியாபாரத்திற்கு கொண்டு சென்றால், அங்கு குறைவான விலைக்கே விற்பனை ஆகிறது. இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால் பப்பாளி மரங்களை அகற்றி வருகிறோம்’ என்றார்.

சந்தைப்படுத்தினால் செழிக்கும்
பப்பாளி பழங்கள் உணவிற்கு மட்டுமின்றி அழகு சாதன பொருட்கள் உட்பட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க பயன்படுவதால், இதன் தேவை அதிகரித்து வருகிறது. இதனை முறையாக சந்தைப்படுத்தினால் விவசாயிகள் பயன்பெறுவதோடு விவசாயமும் செழிக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pattiviranapatti , Papaya trees
× RELATED பட்டிவீரன்பட்டி தாமரைக்குளம்...