காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்தார். தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் நூற்றுக்கணக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்தார்.

கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், காமராஜ், கோகுல இந்திரா, மேற்கு மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு செவிலிமேட்டில் உள்ள தனியார் திருமண மண்டப நுழைவாயிலில் இருந்து மண்டபம் முழுவதும் மலர்களால் பாதை அமைக்கப்பட்டது. அவருக்கு மேள, தாளம், கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மேடை முழுவதும் அதிமுகவினர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பழனி நிற்க இடம் இல்லாததால் கோபித்துக்கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கினார். அவரை முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம் சமாதானப்படுத்தி மீண்டும் மேடைக்கு அழைத்து சென்றார்.

Related Stories:

More