ஓபிசி கணக்கெடுப்புக்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 33 தலைவர்களுக்கு தேஜஸ்வி கடிதம்: ஒன்றிய அரசை நிர்பந்திக்க வேண்டுகோள்

பாட்னா: நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களை கணக்கெடுக்கும்படி ஒன்றிய அரசை வலியுறுத்துவதற்கு ஆதரவு கேட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 33 கட்சிகளின் தலைவர்களுக்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களையும் (ஓபிசி), பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட மக்களையும் (இபிசி) ஜாதிவாரியாக கணக்கெடுக்கும்படி ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு உத்தரவிடும்படி, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் சமீபத்தில் பதிலளித்த ஒன்றிய அரசு, ‘இதர பிற்படுத்தப்பட்ட மக்களை ஜாதிவாரியாக கணக்கெடுப்பது மிகவும் சிக்கலானது. இந்த கணக்கெடுப்பை நடத்துவது இல்லை என்று ஒன்றிய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது,’ என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த கணக்கெடுப்பை நடத்தும்படி ஒன்றிய அரசை வலியுறுத்துவதில் ஆதரவு அளிக்கும்படி கோரி, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உட்பட பாஜ அல்லாத 13 மாநிலங்களின் முதல்வர்கள்,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் 33 பேருக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர், ‘தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியின பிரிவினரை மட்டும் கணக்கெடுக்க ஒன்றிய அரசு முன்வந்துள்ளது. பெரும்பான்மையாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மக்களையும், பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களையும் கணக்கெடுக்க மறுக்கிறது.

இந்த கணக்கெடுப்பை நடத்தும்படி ஒன்றிய அரசை கூட்டாக வலியுறுத்துவதற்கு நாம் கைகோர்க்க வேண்டும். இதற்காக தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும், ஆதரவையும் வரவேற்கிறேன். இதன்மூலம், இந்த கோரிக்கையை வலியுறுத்துவதற்கான திட்டத்தை மேலும் தாமதமின்றி உருவாக்க முடியும்,’ என்று கூறியுள்ளார். இந்த கடிதத்தின் நகலை, தனது டிவிட்டர் பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார்.

செடி கொடிகளை மட்டும்கணக்கெடுக்க முடிகிறதா?

தேஜஸ்வியின் தந்தையும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாட்டில் பறவைகள், விலங்குகள், மரம், செடி கொடிகளை எல்லாம் கணக்கெடுக்க முடிகிறது. இதர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை மட்டும் கணக்கெடுக்க முடியவில்லையா? இந்த மக்கள் மீது பாஜ, ஆர்எஸ்எஸ்.சுக்கு அப்படி என்ன வெறுப்பு?’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

Related Stories:

More
>