×

தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடாது; பாகிஸ்தான், ஆப்கானுக்கு எச்சரிக்கை: குவாட் தலைவர்கள் கூட்டறிக்கை

வாஷிங்டன்: ‘எல்லை தாண்டிய தாக்குதல் உள்ளிட்ட எந்த தீவிரவாத சதித்திட்டத்திற்கும் எந்த நாடும் ஆதரவளிக்கக் கூடாது’ என பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு குவாட் அமைப்பின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். நான்கு நாள் பயணமாக கடந்த புதன்கிழமை அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்த குவாட் மாநாட்டில் பங்கேற்றார். அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2004ல் இந்த அமைப்பை நிறுவின.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி, அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமைப்பட்டதே குவாட் அமைப்பாகும். கொரோனா பரவலுக்குப் பிறகு மீண்டும் குவாட் நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினர். இம்முறை பிரதமர் மோடி தொடங்க உரையாற்றினார். ‘என் நண்பர்களே’ எனக் கூறி 4 நாடுகளின் தலைவர்களையும் அவர் வரவேற்றார். குவாட் அமைப்பு, உலகிலும், இந்திய - பசிபிக் பிராந்தியத்திலும்  அமைதியையும், வளர்ச்சியையும் உறுதி செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதில், ஆப்கான் நிலவரம், இந்திய- பசிபிக் கடல் பிரச்னைகள், கொரோனா பரவல், பருவநிலை மாற்ற சவால்கள், சைபர் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், குவாட் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், தெற்காசியாவில் தீவிரவாதிகளுக்கு பினாமிகளாக சில நாடுகள் செயல்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கையாகும்.

தீவிரவாத குழுக்களுக்கு ராணுவ உதவி, நிதி, போக்குவரத்து உதவி செய்வது, அவர்கள் சதித்திட்டம் தீட்டவும், பிற நாடுகளில் நாச வேலைகளை அரங்கேற்றவும் சொந்த நாட்டு மண்ணை பயன்படுத்த அனுமதிப்பது, எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்டவற்றை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. மேலும், மீண்டும் ஒருமுறை ஆப்கான் மண்ணை பிற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டது.

இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய 5 நாடுகள் உள்ளன. இதில் சீர்த்திருத்தம் செய்து, கூடுதல் நாடுகளை சேர்க்க வேண்டுமென இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இக்கவுன்சிலில் கவுரவ உறுப்பினரான இந்தியா, சுழற்சி முறை அடிப்படையில், கடந்த மாதம் ஒரு மாதம் தலைமை வகித்தது. இந்தியாவின் வலுவான தலைமையில் பாதுகாப்பு கவுன்சில் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டிய பைடன், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றும் உறுதி அளித்தார்.

Tags : Pakistan ,Afghanistan , Do not support terrorism; Warning to Pakistan, Afghanistan: Quad leaders joint statement
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...