துரந்த் கோப்பை கால்பந்து: அரையிறுதியில் பெங்களூரு எப்சி

கொல்கத்தா: துரந்த் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதியில்  விளையாட பெங்களூரு எப்சி அணி தகுதி பெற்றது. கொல்கத்தாவில் நேற்று நடந்த கடைசி காலிறுதியில்  பெங்களூரு எப்சி, ஆர்மி கிரீன் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதுமே துடிப்புடன் விளையாடி அதிரடி காட்டிய  ஆர்மி கிரீன் வீரர்கள்  கோலடித்து அசத்தினர். அந்த அணியின் லாலாம்கிமா 8வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை  கோலாக மாற்றினார்.

அதன் பிறகு பெங்களூரு அணியின் முய்ரங்,  ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் கோலடிக்க இடைவேளையின்போது இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. 2வது பாதியில் பெங்களூரு அணியின்  அகஸ்டின் 46வது நிமிடத்திலும்,  பூட்டியா 74வது நிமிடத்திலும் கோலடித்து அணிக்கு முன்னிலை தந்தனர்.  கடுமையாகப் போராடிய ஆர்மி கிரீன் அணியின்  விபின் 89வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை  கோலாக்கினார்.

அதன்பிறகு இரு அணிகளும் கோலடிக்காததால், ஆட்ட நேர முடிவில் பெங்களூரு எப்சி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில்  எஸ்சி முகமதன் - பெங்களூரு யுனைட்டட் அணிகளும், செப். 29ம் தேதி நடைபெற உள்ள 2வது அரையிறுதியில்  எப்சி கோவா - பெங்களூரு எப்சி அணிகளும் களம் காண உள்ளன. இறுதி ஆட்டம் அக்.3ம் தேதி நடக்கும்.

Related Stories:

>