குமரி மாவட்ட கடல் வழியாக திருட்டுத்தனமாக படகில் 20 பேர் இலங்கை தப்பினர்: கியூ பிரிவு போலீஸ் விசாரணை

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் 70 சதவீத கடற்கரை பகுதிகள் மேற்கு கடற்கரையையொட்டி தான் அமைந்துள்ளன. இலங்கைக்கு செல்ல கூடிய மற்றும் அங்கிருந்து திரும்ப கூடிய கப்பல்கள் கூட குமரி கடல் வழியாக செல்வது உண்டு. இதனால் குமரி கடற்கரை பகுதிகள் அதிக பாதுகாப்பு நிறைந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், குளச்சல் துறைமுகம் அருகில் இருந்து ஒரு விசைப்படகில் ஆண்கள், பெண்கள் உள்பட 20 பேர் இலங்கைக்கு திருட்டுத்தனமாக சென்றதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வந்த இவர்கள், புரோக்கர்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு பின்னர் விசைப்படகில் புறப்பட்டுள்ளனர். மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருந்ததாக கூறப்படுகிறது. தங்களது பயணத்துக்காக குளச்சல் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து குறைந்த விலையில்  பழைய விசைப்படகை வாங்கி உள்ளனர். அதை பழுது நீக்கம் செய்து, பின்னர் மானிய டீசல் உதவியுடன் இவர்கள் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவல் குமரி மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்துள்ளது. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நித்திரவிளை அருகே அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கிருந்து யாராவது மாயமாகி உள்ளார்களா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. படகின் உரிமையாளரை பிடித்து ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories:

>