×

சிட்லபாக்கம் ஏரி பகுதி, ஆக்கிரமிப்பு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அறப்போர்  இயக்கம் சார்பில் சுரேஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிட்லபாக்கம் ஏரியை ஆக்கிரமித்து சுமார் 400 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஏரியின் உபரிநீர் கால்வாய் 32 அடியிலிருந்து 10 அடியாக குறைந்துள்ளது. மொத்தம் 97 ஏக்கர் பரப்புள்ள இந்த ஏரி தற்போது 50 ஏக்கராக குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகளில் இருந்து இந்த ஏரியில் சுமார் 2 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலக்கிறது. இதனால் ஏரி மாசடைந்ததுடன் மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏரி  ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தாம்பரம் தாசில்தாருக்கு  2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை  நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி  அடங்கிய அமர்வில் கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு ஏரி பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டத்தின் கீழ், அரசு  உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

அரசு எடுத்த  நடவடிக்கை குறித்த அறிக்கையை தாம்பரம் தாசில்தார் 2 மாதங்களுக்குள் தாக்கல்  செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த அரசாணைகள் விரைவில் வெளியிடப்படும். அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம், என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நீதிபதிகள், சிட்லபாக்கம் ஏரியில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்கள், திடக்கழிவு மேலாண்மை பகுதி உள்ளிட்ட கட்டிடங்களை அகற்றி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். ஏரியில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை உரிய சட்டத்தை பின்பற்றி அகற்ற வேண்டும். சிட்லபாக்கம் ஏரியின் மொத்த பகுதி, அதில் உள்ள ஆக்கிரமிப்புகள், கட்டிடங்களின் தன்மை, இதுவரை அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் குறித்து அரசு வரைபடத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Tags : Chittagong Lake Area , Chittagong Lake Area, details of occupation to be filed as a report: High Court order to the State
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...