திருமயம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக- பாஜக தனித்தனியே வேட்புமனு: கூட்டணியில் குழப்பமா?

திருமயம்: திருமயம் ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒரு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக-பாஜக தனித்தனியே வேட்புமனு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்தில் உள்ள விராச்சிலை, வி.லட்சுமிபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு இறந்துவிட்டதை அடுத்து அந்த இடம் காலியாக இருந்து வந்தது. இதற்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிடுவதற்காக அதிமுகவை சேர்ந்த பன்னீர்செல்வம், திமுக சார்பில் சுப்பிரமணியன், பாஜக சார்பில் அர்ச்சனா தேவி உள்ளிட்ட 7 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் என்பதால் இதில் நான்கு பேர் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். தற்போது களத்தில் மூன்று பேர் மட்டுமே உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்து வருவதாக இரு கட்சியினரும் கூறிவரும் அதேநேரத்தில் இரண்டு கட்சிகளும் தனித்தனியே ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே திருமயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரங்கினம்பட்டி, ராங்கியம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories:

More
>