ரூ150 கோடி மதிப்புள்ள வீட்டுவசதி வாரிய இடத்தை அதிமுக மாஜி அமைச்சரின் பினாமி அபகரிக்க உடந்தையாக இருந்த பதிவுத்துறை அதிகாரி சஸ்பெண்ட்

* தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

* கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை: அரசு விதிகளை மீறி, ரூ150 கோடி மதிப்புள்ள வீட்டு வசதி  வாரியத்துக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை, அதிமுக மாஜி அமைச்சரின்  பினாமிக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் சொத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேநேரத்தில் அரசு சொத்தை அபகரித்த மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை முகப்பேரில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்,  தொழில் அதிபர்கள், விஐபிக்கள் வசித்து வருகின்றனர். இதனால் சென்னையில் மற்ற பகுதிகளை விட இந்த  பகுதியில் உள்ள நிலங்களின் மதிப்பு அதிகம்.

முகப்பேர், அய்பியா நகர் 2வது  குறுக்குத் தெருவில் 2 ஏக்கர் 61 சென்ட் நிலம் மற்றும் அதை ஒட்டிய 44 சென்ட் நிலம், தமிழக  வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இரண்டு இடத்தின் மொத்த  பரப்பளவு 3 ஏக்கர் 5 சென்ட்.  இதன் அரசு வழிகாட்டி மதிப்பு ரூ85 கோடியே 35  லட்சத்து 77 ஆயிரம். ஆனால் தற்போது மார்க்கெட் மதிப்பு ₹150 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த இரு  நிலத்தையும் வீட்டு வசதி வாரியம் கையப்படுத்தியது. வழக்கமாக இவ்வாறு கையகப்படுத்திய நிலத்தை 5 ஆண்டுகளுக்கு மேல் வீட்டு வசதி வாரியம் பயன்படுத்தவில்லை என்றால் அவற்றை உரிமையாளர்கள் திரும்ப ஒப்படைக்க கோரும் பட்சத்தில் திருப்பி அளிக்க வேண்டும் என்று  சட்டத்தில் இடம் உள்ளது.

அதன்படி 5 ஆண்டுகளுக்கு மேல் வீட்டு வசதி வாரியம்,  அந்த இடத்தை பயன்படுத்தவில்லை. இதனால் தங்கள் இடத்தை தங்களுக்கு திருப்பி அளிக்க  நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலத்தின் உரிமையாளரின் வாரிசுகள் என்று கூறி 26 பேர்  சேர்ந்து மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருப்பன், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தை அரசு பயன்படுத்தாமல் உள்ளது.  இதனால், அந்த நிலத்தை வாரிசுதாரர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், வீட்டு வசதி  வாரியம் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நிலத்துக்கு உரிமை கோரிய 26 பேர் சேர்ந்து, இந்த  நிலத்தை வேளச்சேரியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் கோவையைச் சேர்ந்த  கே.வி.ஜெயராமன், லோகநாதன் ஆகியோருக்கு 2017ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி  பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி இவர்கள் 26 பேரும் சேர்ந்து, வீட்டு வசதி வாரியத்தை அணுகி, நிலத்தை கேட்டிருக்க வேண்டும். வீட்டு வசதி வாரியம், இவர்கள் உண்மையான வாரிசுதாரர் என்றால், நிலத்தை பதிவு செய்து கொடுத்திருக்கும். ஆனால், வீட்டு வசதி வாரியத்திடம் கேட்காமல், நீதிமன்ற உத்தரவை மட்டும் வைத்துக் கொண்டு, இந்த இடம் அமைந்துள்ள பதிவு அலுவலகமான கொன்னூர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யாமல், வேளச்சேரியில் உள்ள பதிவு அலுவலகத்தில், பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

உண்மையான வாரிசுதாரர்களுக்கு அரசு கொடுக்க வேண்டிய நிலத்தை, இவர்களே அதிகார துஷ்பிரயோகம் செய்து, சொத்தை எடுத்துக் கொண்டு, கே.வி.ஜெயராமன், லோகநாதன் ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளனர். வீட்டு வசதி  வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தை இவ்வளவு தைரியமாக பத்திரப்பதிவு செய்வதற்கு காரணமாக கூறப்படுவது, கே.வி.ஜெயராமன், மேற்கு மண்டலத்தை அதிமுக  ஆட்சிக் காலத்தின்போது ஆட்டிப்படைத்து வந்த ஒரு மணியான அமைச்சருக்கு நெருக்கமானவர்  என்று கூறப்படுகிறது. மாஜி அமைச்சரின் உத்தரவின்பேரில் அவரது உதவியாளரான சந்திரசேகர்,  வேளச்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக வந்து, அதிகாரிகளிடம் பேசி பதிவு செய்து  கொடுக்க உதவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 அப்போது பத்திரப்பதிவு அதிகாரியாக இருந்த சரவணக்குமார்,  கொன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு கடிதம் மூலம் எழுதி, இந்த விற்பனை  குறித்த அறிக்கையை கேட்கிறார். கொன்னூரில் உள்ள பதிவு அதிகாரி 2016ம் ஆண்டு  ஆகஸ்ட் 22ம் தேதி, வேளச்சேரி பத்திரப்பதிவு அதிகாரி சரவணக்குமாருக்கு  கடிதம் எழுதியுள்ளார். அதில், இது வீட்டு வசதி வாரியத்தின் பெயரில் உள்ள  சொத்து. நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளனர். வழக்கில்  மனுதாரர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு உள்ளது. ஆனால், வீட்டு வசதி வாரியம் மேல்  முறையீடு சென்றதாக இதுவரை தகவல் இல்லை என்று கூறியுள்ளார்.

தற்போது  வீட்டு வசதி வாரியம்தான் நிலத்தின் உரிமையாளர் என்கிறபோது, அந்த  துறையினர்தான் நிலத்தின் உரிமை கோருபவர்களுக்கு எழுதிக் கொடுக்க வேண்டும்.  மேலும், இந்த நிலத்தை பணம் கொடுத்துதான் வீட்டு வசதி வாரியம்  வாங்கியுள்ளது. வீட்டு வசதி வாரியத்துக்கு தெரியாமல், நிலத்தின்  உரிமை யார் பெயருக்கும் மாறாமல் இருக்கும்போது, 26 பேர் சேர்ந்து, 2  பேருக்கு எழுதிக் கொடுத்ததுபோன்று பத்திரப்பதிவு செய்துள்ளது விதிமுறை  மீறல் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் வீட்டு வசதி வாரியத்துக்கும்  ₹86 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் வீட்டு வசதி வாரியம், நில  உரிமையாளர்களுக்கு பதிவு செய்து கொடுக்கும்போது ₹10 கோடி வரை பதிவுத்துறைக்கு கட்டணம் கட்டியிருக்க வேண்டும்.

நிலத்தின்  உரிமையாளர்கள், கோவையைச் சேர்ந்த 2 பேருக்கு எழுதிக் கொடுக்கும்போது மேலும் ஒரு ₹10 கோடி என ₹20 கோடி வரை பத்திரப்பதிவுத்துறைக்கு வருமானம்  கிடைத்திருக்கும். ஆனால் அமைச்சரின் பினாமி என்ற காரணத்துக்காக  வேளச்சேரியில் உள்ள பதிவுத்துறை அதிகாரிகள், பணம் வாங்கிக் கொண்டு வீட்டு  வசதி வாரிய நிலத்தை விதிமுறைகளை மீறி விற்பனை செய்ய துணைபோயுள்ளது  தெரியவந்துள்ளது. மேலும், முகப்பேரில்   வழிகாட்டு மதிப்பு சதுர அடிக்கு ₹6,500 என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி   பார்த்தால் ₹85.35 கோடிக்கு பதிவு செய்ய வேண்டும். ஆனால் வேளச்சேரியில் உள்ள பதிவு அலுவலகத்தில் சொத்தின் மதிப்பு 11.26 கோடி ரூபாய் என பதிவு செய்துள்ளது.

வழிகாட்டி மதிப்பை விட 8 மடங்கு குறைவாக விற்பனை செய்துள்ளனர். இதன் மூலமும் அரசுக்கு இரட்டிப்பு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை தினகரன் நாளிதழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இது குறித்து பதிவுத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆரம்பத்தில் நீதிமன்ற உத்தரவுப்படிதான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கீழ்மட்ட அதிகாரிகள் பதிவுத்துறை ஐஜிக்கு அறிக்கை கொடுத்தனர். ஆனால் தினகரன் நாளிதழ் மீண்டும், மீண்டும் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் இறையன்பு, இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையில்தான் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தை பதிவு செய்து கொடுத்த, அப்போது வேளச்சேரி சார்பதிவாளராக இருந்த சரவணக்குமாரை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி சிவனருள் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பதிவை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவுத்துறைக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>