×

மாஜி அமைச்சர் வேலுமணிக்கு உதவிய குற்றச்சாட்டு; மாவட்ட பதிவாளர் உள்பட 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்: 19 ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணியாற்றியவர்

சென்னை: மாஜி அமைச்சர் வேலுமணிக்கு முறைகேடாக உதவி மற்றும் வீட்டு வசதி வாரிய நிலம் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் 2 பேர் நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழகத்தில், கொடநாடு  விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான்,  விஐபிக்களுக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் கொடுத்து இருந்தார். இந்த கொலைக்கு மறைமுகமாகவும் உடந்தையாகவும் பல அதிகாரிகள் இருந்தது தற்போது வெளியாகி வருகிறது.

இதில், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பலர் கொடநாடு எஸ்டேட் வாங்குவது முதல், மாஜி அமைச்சர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை பெயர் மாற்றம்  செய்தது, பின்னர் கொலை சம்பவத்துக்குப் பிறகு அந்த சொத்துகள் மீண்டும் பெயர் மாற்றம் செய்தது என பல குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. மேலும், பல மாஜி அமைச்சர்களின் சொத்து குவிப்புக்கு அவர்கள்  உடந்தையாக இருந்ததும், அவர்கள் சொத்துகளை வாங்கி குவிக்க இவர்கள் உதவி  செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, சிபிசிஐடி  மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையும் விசாரணை நடத்தியது. பத்திரப்பதிவு துறை  சார்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இதில், மேற்கு மண்டலத்தில் பணியாற்றிய  பலரும் பெரிய அளவில் முறைகேடு செய்திருப்பதும், அதன் மூலம் பல கோடி ரூபாய்  மதிப்புக்கு சொத்துகளை வாங்கி குவித்திருப்பதும் தெரியவந்தது. இதை  தொடர்ந்து, பதிவுத்துறையைச் சேர்ந்த 7 அதிகாரிகள் சென்னைக்கு வரும்படி  அழைக்கப்பட்டனர். 3 நாட்களாக சென்னையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கோவை  மாவட்ட பதிவாளராக (தணிக்கை) இருந்த செல்வக்குமார், ஊட்டி மாவட்ட பதிவாளராக  (நிர்வாகம்) பணியாற்றி வந்த செல்வநாராயணசாமி, கோவை  சிங்காநல்லூர் மாவட்ட பதிவாளர் கரீம் ராஜா, ஈரோடு மாவட்ட பதிவாளராக இருந்த  பெரியசாமி, கிருஷ்ணகிரி  மாவட்ட பதிவாளராக (நிர்வாகம்) இருந்த செந்தில்குமார், ஈரோடு  பதிவு மாவட்ட உதவி ஐஜியாக இருந்த ராஜா, கோவை  பதிவு மாவட்ட உதவி ஐஜியாக (நிர்வாகம்) இருந்த சுரேஷ் ஆகிய 7 பேர் அதிரடியாக மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டிலில் வைக்கப்பட்டனர்.

செல்வக்குமார் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், கடந்த 19 ஆண்டுகளாக ஒரே பதிவு மாவட்டமான கோவையில் மாறுதல் இன்றி பணியாற்றி வருகிறார். தமிழக பதிவுத்துறை  வரலாற்றில் 19 ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் யாரும் பணியாற்றியதில்லை. சசிகலாவின் உறவினர் ராவணன் மூலம்தான் இந்த மாவட்டத்துக்கு வந்தார். அதன்பின்னர், கோவை கணபதியில் 3 ஆண்டுகள், பெரியநாயக்கன் பாளையத்தில் இரண்டரை ஆண்டுகள், சூலூரில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

பின்னர் மாவட்ட பதிவாளராக பதவி உயர்வு பெற்று காந்திபுரம் 2 ஆண்டுகள், சிங்காநல்லூர் 2 ஆண்டுகள், கோவை மாவட்ட தணிக்கை பிரிவில் 3 ஆண்டுகள் என மொத்தம் 19  ஆண்டுகளும் கோவை பதிவு மாவட்டத்தில் பணியாற்றினார். ஒரே பதிவு மாவட்டத்தில்  பணியாற்றினாலும் இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனைக்குள்ளானது இல்லை. லஞ்ச  ஒழிப்பு போலீஸ் முழுமையாக இவரது கட்டுப்பாட்டில் இருக்கும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கோவை  மாஜி அமைச்சர் வேலுமணி கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் இவரும் அவரது ஆதரவாளராக  மாறிவிட்டார்.

அவருக்காக பல வேலைகளை செய்து கொடுத்துள்ளார். கோவை  மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர்களிடம் இவர்தான் மாதம் ரூ.50 ஆயிரம் வீதம்  வசூலித்து, அமைச்சர் ஒருவரிடம் கொடுப்பாராம். அமைச்சர்தான் அந்தப் பணத்தை  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை அழைத்து ஒவ்வொரு மாதமும் வரவழைத்து லஞ்சமாக  கொடுப்பாராம். அப்போது, இது நான் கொடுக்கும் மாதச் சம்பளம் என்று சினிமா  பாணியில் கூறுவாராம். இதனால், கோவை மாவட்டம் மட்டுமல்லாது மேற்கு மண்டலமே  செல்வக்குமாரின் கட்டுப்பாட்டில் வந்தது.

அந்த துறையின் அமைச்சரே  நினைத்தாலும் கோவை மாவட்டத்தில் யாரையும் நியமிக்க முடியாது, மாற்றவும்  முடியாது என்ற நிலைமையே இருந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை கூட முன்கூட்டியே  செல்வக்குமாரிடம் அனுமதி வாங்கித்தான் சோதனை நடத்த முடியும். அதையும் மீறி  சோதனை நடத்தினால் செல்வாக்கான அமைச்சர் மூலம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளையே  மாற்றிவிடுவார். சர்வ வல்லமை பொருந்தியவராக இருந்தார் செல்வக்குமார். இவர் மீது தொடர் புகார் எழுந்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு புகார் சென்றது.

அவரது உத்தரவின்பேரில், விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இவர், 2014ம் ஆண்டு கோவை காந்திபுரம் சார் பதிவாளராக பணியாற்றியபோது வீட்டுவசதி வாரிய நிலத்தை முறைகேடாக பதிவு செய்ய உடந்தையாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர், கோவை நகரை விட்டு, பதிவுத்துறை ஐஜியின் அனுமதியின்றி எங்கும் செல்லக்கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இவரது ஆதரவாளராக இருந்த ஈரோடு மாவட்ட பதிவாளராக பணியாற்றி காத்திருப்ேபார் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மாவட்ட பதிவாளர் பெரியசாமியும், அதிகார துஷ்பிரயோகம், முறைகேடுகளில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவரும் ஈரோடு மாவட்டத்தை விட்டு, பதிவுத்துறை ஐஜியின் அனுமதியின்றி செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட மேற்கு மண்டபல அதிகாரிகள் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Maji Minister Velamani ,District Registrar , Accusation of aiding former minister Velumani; Suspended 2 officers including District Registrar: Served in the same district for 19 years
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...