டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய முறை அமலாகிறது; தமிழில் 45 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம்: அனைத்து தேர்வுகளுக்கும் முன்பாக தமிழ்மொழி தேர்வு கட்டாயமாகிறது

சென்னை: டிஎன்பிஎஸ்சியின் உயர்மட்ட குழு கூட்டம் கடந்த 22ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்,  செயலாளர் உமாமகேஸ்வரி, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா மற்றும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்துவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும்.

தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு  முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அரசு எடுத்துள்ள கொள்கை முடிவுகளின் அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டுவர டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தேர்வு எழுதுபவர்களுக்கான புதிய அறிவுரைகள் அண்மையில் வெளியிடப்பட்டது. மேலும் தேர்விலும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது.

அதாவது ஒவ்வொரு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு முன்பாகவும் தமிழ் மொழித்தாள் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் 45 மதிப்பெண்கள் எடுத்து தகுதி பெற வேண்டும். அப்படி தகுதி பெற்றால் மட்டுமே பொது தேர்வுக்குரிய விடைத்தாள்களை திருத்த பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கான நியமனங்களில் 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியான உடன், அதையும் நடைமுறைப்படுத்தவும் டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.

அரசுத்துறைகளில் காலியாக குருப் 1, 2, 4 உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு புதிய திருத்தங்கள் மேற்கொள்வதற்கு கருத்துருக்கள் தேர்வாணையத்தின் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றுக்கான அனுமதி அரசிடமிருந்து கிடைத்தவுடன் தேர்வு நடைபெறும் தேதிகளும் வெளியிடப்படும் என தெரிகிறது.

Related Stories:

>