டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை

புதுடெல்லி:தலைநகர் டெல்லியின் ரோஹினி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் போல் நுழைந்த கும்பல், நேற்று மதியம் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியவர்கள் மீது போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில் 2 குற்றவாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். முன்னதாக பல்வேறு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜிதேந்தர் கோகியை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றபோது, எதிர்தரப்பு ரவுடிகள் கொலை செய்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஒன்றிய அரசை கடுமையாக சாடியுள்ளனர். டெல்லியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டெல்லி கீழமை நீதிமன்றங்களில் உரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் டெல்லி காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி செய்ய வேண்டும். தற்போது நடந்துள்ள சம்பவம், மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது’ என்று அவர் கூறியுள்ளார். நீதிமன்ற வளாக துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று நீதிமன்ற புறக்கணிப்பை நடத்தினர்.

இதற்கிடையே, மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும். முக்கிய குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதை விட, அவர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்துவதை நீதிமன்றங்கள் உறுதிசெய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இம்மனு மீதான விசாரணை ஓரிரு நாளில் நடைபெறும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories:

More
>