வடகிழக்குப் பருவமழை : பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!!

சென்னை : வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, காந்தி மண்டபம் சாலை, இந்திரா நகர், திருவான்மியூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (செப். 25) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை, காந்தி மண்டபம் சாலை, இந்திரா நகர், திருவான்மியூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், தூர்வாரும் பணிகள், ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் மழைநீர் தேங்கா வண்ணம் மேற்கொள்ளப்பட்டு வரும் இதர வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

சென்னை, காந்தி மண்டபம் சாலையில் மழைக்காலங்களில் தேங்கி போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ள வெள்ள நீரையும் அருகில் உள்ள கேன்சர் இன்ஸ்டிட்யூட், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலும் தேங்கும் மழைநீரையும் அகற்றும் வகையில், 1,516 மீட்டர் நீளத்துக்கு ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்கள் தற்போது கட்டப்பட்டுள்ளன.

வடிகால்கள் மூலம் வரும் மழைநீர் ஒரு பெரிய கீழ்நிலை தொட்டியில் சேமிக்கப்பட்டு, பின்பு சிறு கால்வாய் வழியாக பக்கிங்ஹாம் கால்வாய் மூலம் வெளியேற்ற தற்பொழுது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்கால்வாய்களில் சேர்ந்துள்ள வண்டல்கள், நவீன ஹைட்ராலிக் மற்றும் அதிக உறிஞ்சும் திறன் மற்றும் ஜெட்டிங் வசதி கொண்ட இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வரும் முதல்வர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அனைத்து வண்டல் வடிகட்டும் தொட்டிகளை (Silt Catch Pit) தூய்மைப்படுத்தி, மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யும் பணியினையும் முதல்வர் பார்வையிட்டார். இப்பணிகள் அனைத்தும் ஒரு வாரத்துக்குள் முடிக்கப்பட்டு, இப்பகுதியில் வெள்ள நீர் தேங்கா வண்ணம் துரித நடவடிக்கைகளை எடுத்திட அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, இந்திரா நகர் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் மற்றும் திருவான்மியூர் லேட்டிஸ் பாலத்தின் அருகில் பக்கிங்ஹாம் கால்வாயில் 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் ரோபோடிக் எக்ஸ்கவேட்டர் மற்றும் மிதக்கும் ஆம்பிபியன் இயந்திரம் மூலம் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

வனத்துறை சார்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேர்ந்துள்ள கழிவுகளையும், குட்டைகள் மற்றும் சிறு பாலங்கள் கீழ் பகுதிகளில் சேர்ந்துள்ள கழிவுகளையும் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் மிதக்கும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, நாராயணாபுரம் ஏரியில் 18 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பெரும் வடிகால் (Major Drain) பணியினை முதல்வர் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.

வேளச்சேரி ஏரியில் ஆகாயத் தாமரை மிக அதிகமான அளவில் வருடம் முழுவதும் வளர்ந்து நீரோட்டத்தைத் தடுப்பது மட்டுமின்றி, கொசு உற்பத்திக்கும் காரணமாக உள்ளது. ஆழம் அதிகமுள்ள இந்த ஏரியில் ஆகாயத் தாமரைகளை நவீன மிதக்கும் ஆம்பிபியன் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்மூலம், தற்பொழுது இந்த வருடத்தில் சுமார் 500 டன் ஆகாயத் தாமரை அகற்றப்பட்டு அவை உடனுக்குடன் லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் சுற்று வட்டாரங்களில் வெள்ளம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் வீராங்கல் ஓடையில் 20 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினையும், புதியதாக 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 100 HP பம்புயினையும் முதல்வர் பார்வையிட்டு, வேளச்சேரி பகுதியில் ஏ.ஜி.எஸ் காலனி, கல்கி நகர் போன்ற மிகவும் தாழ்வான பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள நீர் தேக்கத்தை தவிர்த்திட 14 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

முதல்வர் ஆய்வு முடித்தபின்பு, அரசு உயர் அலுவலர்களிடம் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு விரைவாக, முழுமையாக இப்பணிகளை முடிக்ககூடிய வகையில், தினமும் கண்காணித்து, பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையினை அனைத்துத் துறை அலுவலர்களும் அளித்திட அறிவுறுத்தினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>