×

அறநிலையத்துறை நேர்மையாக செயல்படும்; தெய்வங்களின் பொருட்கள் தெய்வங்களுக்குத் தான் பயன்பட வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்!!

மதுரை:மதுரை மீனாட்சி ேகாயில் ஆடி வீதியில் ஓதுவார் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஓதுவார் பயிற்சி பள்ளி கடந்த 18 மாதங்களாக இயங்கவில்லை. இந்த நிலையில், ஓதுவார் பயிற்சி பள்ளியில் பல்வேறு வகையான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேம்படுத்தப்பட்ட ஓதுவார் பயிற்சி பள்ளியை திறந்து வைத்தார். தொடர்ந்து கண் பாதிப்பு ஏற்பட்ட பார்வதி யானையை பார்த்து, சிகிச்சை முறைகளை டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இதேபோல் கடந்த 2018ல் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீரவசந்தராயர் மண்டப பகுதியை பார்வையிட்ட அமைச்சர், பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கூறுகையில்,‘‘2018ல் நடந்த தீ விபத்தால் வீரவசந்தராயர் மண்டபம் முழுவதும் சேதமடைந்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றதும் மண்டப புனரமைப்பு பணிகளை விரைவுப்படுத்த முதல்வர் உத்தரவிட்டார்.

இதனால், இரண்டாவது முறையாக பார்வையிட்டுள்ளேன். நாமக்கல்லில் தயாரிக்கப்பட்ட 8 கல்தூண்கள் மதுரை வந்துள்ளன. இங்கு பணிகள் நடக்கின்றன. கோயில் வளாகத்திலேயே மணல் பரப்பை உருவாக்கி அதில் கல்தூண்களை வடிவமைக்கும் பணி நடக்கும். ஓதுவார் பயிற்சி பள்ளி மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற 6 பேர் விண்ணப்பித்தனர்.

ஏற்கனவே உள்ளவர்களுடன் சேர்த்து, பயிற்சிளிக்கப்படும். அழகர்கோயில் மலைப்பாதையை அகலப்படுத்தும் பணி விரைவாக துவங்கும். ராமேஸ்வரத்தில் செயல்படாமல் உள்ள தெய்வங்களின் வாகனங்கள் முறையாக செப்பனிடப்பட்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வீரவசந்தராயர் மண்டபம் பழமை மாறாமல் தொல்லியல் துறை வழிகாட்டுதல் கல்தூண் வடிவமைக்கும் பணி 3 ஆண்டுகளில் முடியும். இங்கு குடமுழுக்கு நடத்துவதற்கான ஆய்வுகள் செய்துள்ளோம். பக்தர்களின் கருத்துகளை கேட்டு, ஆகம விதி, சாஸ்திர சம்பிரதாயங்களை கணக்கிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டு விரைவில் முடிவெடுத்து அறிவிப்போம். தமிழகத்தில் கூடுதலாக 5 இடங்களில் ரோப்கார் சேவை துவக்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்றதும் சட்டத்திற்கு உட்பட்டு 188 இடங்களில் கோயில் நில ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டு, நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 65 இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டியுள்ளது. கோயில் நில வாடகை பிரச்னை தொடர்பாக தலைமை செயலர் தலைமையில் வாடகை நிர்ணய குழு அமைக்கப்பட்டு வாடகையை மறு நிர்ணயம் செய்யப்படும். அறநிலையத் துறை வெளிப்படையாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படும். தெய்வங்களின் பொருட்கள் தெய்வங்களுக்குத் தான் பயன்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்எல்ஏக்கள் தளபதி, பூமிநாதன், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து ெகாண்டனர்.

Tags : Minister ,Sebabu Project Circle , அமைச்சர் சேகர்பாபு
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...