பொள்ளாச்சி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது-கணவன், மனைவி உயிர் தப்பினர்

கிணத்துக்கடவு :  பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ஏ. நாகூர் ஊராட்சியில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது. இதில், கணவன், மனைவி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஏ.நாகூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.நாகூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 10-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. அந்த  வீடுகளில் அந்தந்த பயனாளிகள் வசித்து வருகின்றனர். இதில், நாகப்பன், மாராள் தம்பதி தொகுப்பு வீட்டில் வசித்து கொண்டு ஆடு மேய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கமாக நேற்று காலை ஆடுகள் மேய்க்க வெளியே சென்று விட்டு, இரவில் வீட்டிற்கு வந்தனர்.  வீட்டு வேலைகளை முடித்த பின்னர் ஆடுகளை பராமரிக்க தம்பதி சென்றனர்.

அப்போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர்.

இதேபோன்று, பல தொகுப்பு வீடுகளும் சிதலமடைந்துள்ளதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால், இதில் வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது இடிந்து விழுந்த வீட்டிற்கு பதிலாக புதிய தொகுப்பு வீடு கட்டித்தரவேண்டும். சிதிலமடைந்த வீடுகளை புதுப்பித்து தர வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>