மாவட்டத்தில் 950 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு-வனத்துறை அமைச்சர் தகவல்

ஊட்டி :  நீலகிரி மாவட்டம் குன்னூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்து 50 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் (மஞ்சள், குங்குமம், வளையல், மங்கல பொருட்கள் தட்டு, ரவிக்கைதுணி) மற்றும் ெகாரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகைக்கான பத்திரம், தந்தை அல்லது தாயை இழந்த 13 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலை, பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 7 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை, ஊட்டச்சத்து குறைபாடுள்ள 3 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு அடங்கிய பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார்.

தொடர்ந்து இணையவழி அனுபோக சான்றிதழ்கள் வழங்கும் பணியினை துவக்கி வைத்து 5 விவசாயிகளுக்கு அனுபோக சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில்,‘‘போஷான் அபியான் திட்டத்தின் மூலம் எடை குறைவாக உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு உள்ளிட்ட உணவு வகைகளை வழங்கி எடை அதிகரிப்பதோடு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு தாய்வீட்டு சீதனமாக சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு 5 வகையான உணவுகள் இனிப்பு பழத்துடன் பரிமாறப்பட்டு அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கப்பதற்காகவே நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் 950 கர்ப்பிணிகளுக்கு தேவையான சீர்வரிசை பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படாமல் இருப்பதற்காக தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக அவர்களை மகிழ வைத்து அவர்களுக்கு தேவையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் என 64 குடும்பங்களை சேர்ந்த 111 குழந்தைகள் கண்டறியப்பட்டு அதில் தாய் அல்லது தந்தையை இழந்த 108 குழந்தைகள் கண்டறியப்பட்டு உதவித்தொகை பெற கலெக்டரால் சென்னைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 2120 நபர்களுக்கு ரூ.9.36 கோடி மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் சார் ஆட்சியர் தீபனா விஷ்வேஸ்வரி, மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் துணை இயக்குநர் பாலுசாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>