நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து பலம் மிக்க கட்சியாக உருவெடுக்கிறது திமுக!!

சென்னை:மாநிலங்களவையில் திமுகவின் பலம் 10 ஆக அதிகரிப்பதன் மூலம் நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து பலம் மிக்க கட்சியாக திமுக உருவெடுக்கிறது. ராஜ்யசபா என்று அழைக்கப்படுவது மாநிலங்களவை. இதன் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245 ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஆறு ஆண்டுகள். இதில் 12 நியமன உறுப்பினர்கள் ஆவர். அண்மையில் மறைந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் இடத்திற்கு நடந்த தேர்தலில், திமுகவின் புதுக்கோட்டை அப்துல்லா போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராகினார். தற்போது, ராஜ்யசபாவில், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ, பி.வில்சன், எம்.சண்முகம் மற்றும், புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோர் திமுக சார்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ராஜினாமாவால் காலியான இடங்களுக்கு திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என் ராஜேஸ்குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வாகினர்.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 27ம் தேதி (திங்கள்) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனால், மாநிலங்களவையில் திமுகவின் பலம் 10 ஆக அதிகரிக்கிறது. மக்களவையில் திமுகவுக்கு 24 எம்.பி.க்கள் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் திமுகவின் பலம் 34 ஆக உயர்கிறது. இதன்மூலம் நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து பலம் மிக்க கட்சியாக திமுக உருவெடுக்கிறது. தற்போது மக்களவையில் 301, மாநிலங்களவையில் 94 என்று 395 எம்.பி.க்களுடன் பாஜக முதலிடத்திலும், மக்களவையில் 52, மாநிலங்களவையில் 33 என்று 85 எம்.பி.க்களுடன் காங்கிரஸ் 2-வது இடத்திலும் உள்ளன. அதேவேளையில், மக்களவையில் 22, மாநிலங்களவையில் 12 என 34 எம்.பி.க்களுடன் திரிணமூல் காங்கிரஸ் 3-வது இடத்தில் இருக்கும் நிலையில், மக்களவையில் 24, மாநிலங்களவையில் 10 என 34 எம்.பி.க்களுடன் அதற்கு சமமான இடத்தை திமுக பிடிக்கிறது.

Related Stories:

More
>